

சண்டிகர்: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணாவைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி அனுப்பப்படுவதாக மத்திய அரசு குற்றம்சாட்டியிருந்தது. இந்தியாவில் ஏதேனும் பிரச்சினை ஏற்படுத்தும் நோக்கில், இதுபோன்று நிதி வழங்கப்படுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாரதிய கிசான் யூனியன் தலைவர் சுக்தேவ் சிங் கூறும்போது, "பஞ்சாப் மாநிலம் மோஹாவில் செயல்படும் ஒரு வங்கியில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதன் பேரில் நான் அங்கு சென்றபோது, எங்கள் சங்கத்தின் வங்கிக்கணக்கில் வெளிநாடுகளில் இருந்து ரூ.9 லட்சம் நிதி வந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், முறையான அனுமதியின்றி இதுபோன்று நிதியுதவி பெற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் எச்சரித்தனர்.
வெளிநாடுகளில் வசிக்கும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எங்கள் சங்கத்துக்கு நிதி அனுப்புகின்றனர். அது அவர்களின் உரிமை. இதை யாராலும் தடுக்க முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக சங்க நிர்வாகிகளிடம் கலந்து பேசி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்" என்றார்.