Published : 21 Dec 2020 03:15 AM
Last Updated : 21 Dec 2020 03:15 AM

ஆப்பிள் ஐ போன் உதிரி பாக தயாரிப்பு நிறுவனம் விஸ்ட்ரான் ஊழியர்களிடம் மன்னிப்பு கோரியது: இந்திய பிரிவு துணைத் தலைவர் பதவி நீக்கம்

தைவானைச் சேர்ந்த விஸ்ட்ரான் நிறுவனத்தின் இந்தியப் பிரிவுதலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன் ஊழியர் களிடம் மன்னிப்பு கோரியுள்ளது விஸ்ட்ரான். சில ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்பதும், சிலருக்கு அவர்களது பதவிக்குரிய ஊதியம் வழங்கப் படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

ஊழியர்களின் பாது காப்பு அவர்களின் நலனுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக் கப்படும் என நிறுவனம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

விஸ்ட்ரான் ஆலை கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது. ஆப்பிள் ஐ போனுக்கு உதிரி பாகங்கள் சப்ளை செய்வதில் பிரதான நிறுவனமாக விஸ்ட்ரான் திகழ்கிறது. கடந்த வாரம் இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், தங்களுக்கு உரிய ஊதியம் வழங்கவில்லை என்று நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டம் காரணமாக விஸ்ட்ரானிடம் இருந்து உதிரி பாகங்கள் வாங்குவதை ஆப்பிள் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இப்பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண வேண்டும் என்றும், அதன் பிறகு சிறிது காலம் விஸ்ட்ரான் நிறுவன நடவடிக்கைகள் கண்காணிப்பில் வைக்கப்படும் என்றும், புதிய ஆர்டர்கள் தருவது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தின் போது ஊழியர்கள் நிறுவனத்தின் பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதில் 71 லட்சம் டாலர் அளவுக்கு பொருட்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காணுமாறு மாநில அரசுக்கு மத்திய அரசு பரிந்துரை அனுப்பியது. இதில் முதலீட்டாளர்களுக்கு பாதிப்பு வராத வகையில் தீர்வு காண வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில் விஸ்ட்ரான் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரச்சினைக்கு காரணமாக இருந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பிரச்சினை எப்படி உருவானது என்பதை ஆராய்ந்து எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்ளப்படும். அனைத்து ஊழியர்களுக்கும் உரிய ஊதிய இழப்பீடு உடனடியாக வழங்கப்படும். நரசபுரா பகுதியில் உள்ள ஆலையில் ஊழியர்களிடையிலான பிரச் சினையைத் தீர்க்க ஊழியர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக் கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த ஆலையில் ஆய்வு மேற்கொண்ட மாநில குழு, ஊழியர்கள் நியமனத்தில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்றுள்ளதை கண்டுபிடித்துள்ளது. இந்த ஆலையில் 5 ஆயிரம் பேர் மட்டுமே பணி புரிய அனுமதி பெறப்பட்டிருந்தது. ஆனால் இங்கு 10,500 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x