முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட ரூ.10 கோடியை குருவாயூர் கோயிலுக்கு திருப்பித் தரவேண்டும்: கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

குருவாயூர் கோயில்.(கோப்புப் படம்)
குருவாயூர் கோயில்.(கோப்புப் படம்)
Updated on
2 min read

குருவாயூர் தேவசம் போர்டு, முதல்வர்நிவாரண நிதிக்கு வழங்கிய ரூ.10 கோடியை கேரள அரசு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அந்தமாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டில் அந்தமாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது, குருவாயூர் தேவசம் போர்டு சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடிகொடுக்கப்பட்டது. இதை எதிர்த்து பக்தர்கள் தரப்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது தேவசம் போர்டின் சில விதிகளை குறிப்பிட்டு, முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி வழங்கியதில் தவறில்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த மே மாதம், குருவாயூர் தேவசம் போர்டு சார்பில் கரோனா நிவாரண பணிக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு மேலும் ரூ.5 கோடி வழங்கப்பட்டது. இதை எதிர்த்து நாகேஷ், பிஜேஷ் குமார், பாபு, பிரசன்ன குமார், கே.எஸ்.ஆர்.மேனன், மோகன் குமார், பிரதீப், அருண்குமார், அனில் குமார் உள்ளிட்ட பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை நீதிபதிகள் ஹரிபிரசாத், அனு சிவராமன், எம்.ஆர்.அனிதா ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்து கடந்த 18-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்கு சொந்தமான அசையும், அசையாசொத்துகள் அனைத்துக்கும் சொந்தக்காரர் குருவாயூரப்பன். குருவாயூர் தேவசம் போர்டு, கோயில் சொத்துகளை நிர்வகிக்கும் அறங்காவலர் மட்டுமே. கோயிலின் வருவாய், சொத்துகளை வேறு யாருக்கும் கொடுக்க தேவசம் போர்டுக்கு அதிகாரம் கிடையாது.

கோயில் சொத்துகளை முறையாக பராமரிக்க வேண்டும். பக்தர்களுக்கு தேவையான தங்குமிட வசதி, குடிநீர்,கழிப்பறை, மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கோயிலின் கலாச்சாரம், கொள்கைகளை பரப்ப வேண்டும். இந்து மதத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்கு உதவிசெய்யலாம். சம்ஸ்கிருதம், மலையாள மொழிகளின் வளர்ச்சிக்கு பாடுபடலாம். இதர இந்து கோயில்களுக்கு நன்கொடைகளை வழங்கலாம். இவைதான் குருவாயூர் தேவசம் போர்டின் பணிகளாக இருக்க வேண்டும்.

தேவசம் போர்டு விதிகளை தவறாக புரிந்துகொண்டதன் விளைவாக கடந்த 2019-ம் ஆண்டில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. குருவாயூர் தேவசம் போர்டிடம் இருந்து பெறப்பட்ட ரூ.10 கோடியை கேரள அரசு திருப்பிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த இந்து ஐக்கிய வேதி அமைப்பின் பொதுச்செயலாளர் பாபுகூறும்போது, ‘‘கோயிலின் சொத்துகளை பாதுகாப்பதில் மட்டுமே தேவசம்போர்டு கவனம் செலுத்த வேண்டும். கோயிலின் வருவாய், சொத்துகளை வேறு யாருக்கும் கொடுக்க தேவசம் போர்டுக்கு அதிகாரம் கிடையாது. இதை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருப்பதை வரவேற்கிறோம்’’ என்று தெரிவித்தார். குருவாயூரில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோயில் உட்பட 12 கோயில்களை குருவாயூர் தேவசம் போர்டு நிர்வகித்து வருகிறது.

‘இந்து கோயில் நிதி, அரசு நிதி அல்ல’

இந்து முன்னணியின் மாநில செயலாளர் ஜே.எஸ்.கிஷோர்குமார் கூறியதாவது: குருவாயூர் கோயில் நிதியை, கேரள அரசு கரோனா நிவாரணப் பணிகளுக்கு எடுத்துக் கொண்டது தவறு என்ற நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. கரோனா காலத்தில் தமிழக அரசும் பல்வேறு கோயில்களின் வைப்புத் தொகையில் இருந்து ரூ.50 கோடி அளவுக்கு எடுப்பதாக அறிவித்தது. இதை எதிர்த்து நாங்கள் வழக்கு தொடர்ந்ததும் அந்த முடிவை அரசு கைவிட்டது. மதச்சார்பற்ற அரசு, இந்து கோயில் நிதியை மட்டும் தன்னிச்சையாக எடுத்துக் கொள்வது கண்டிக்கத்தக்கது.

இந்து கோயில் நிதி என்பது அரசு நிதி அல்ல. பக்தர்களின் நன்கொடை, கோயில் சொத்துகள் மூலம் கிடைக்கும் வருமானமே கோயில் நிதியாக வங்கியில் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டுள்ளது. கோயில் நிதியை கரோனா போன்ற நெருக்கடி காலங்களில் மக்களுக்கு பயன்படுத்துவதை இந்து முன்னணி எதிர்க்கவில்லை. ஆனால், கோயில் நிதியில் இருந்து மக்களுக்கு செய்யும் உதவிகளை கோயில் மூலமே செய்ய வேண்டும்.

கரோனா காலத்தில் கோயில் நிதி மூலம் உணவு, உதவிப் பொருட்களை வழங்குமாறு தமிழக அரசுக்கு இந்து முன்னணி சார்பில் கோரிக்கை விடுத்தோம். அதை தமிழக அரசு ஏற்கவில்லை. மாறாக, வழக்கமாக நடந்த அன்னதான திட்டத்தையும் கரோனா காலத்தில் நிறுத்தியது. இப்போதுகூட பெரிய கோயில்களில் மட்டுமே அன்னதானம் நடக்கிறது. அனைத்து கோயில்களிலும் அன்னதானத் திட்டத்தை அரசு தொடங்க வேண்டும். கோயில் நிதி மூலம் தேவாரம், திருவாசக வகுப்புகள், மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in