

மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்த 6 மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் நேற்று புதிதாக 3,940 பேருக்கு கோவிட் -19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,92,707 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 48,648 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த பல மாதங்களாகவே மகாராஷ்டிராவில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும் எதிர்பார்த்த அளவு கரோனா வைரஸ் குறையாத காரணத்தால் மகாராஷ்டிராவில் அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே சமூக ஊடகங்களில் கூறியதாவது:
''மருத்துவ நிபுணர்கள் இரவு ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த யோசனை தெரிவித்தனர். ஆனால், இந்த நடவடிக்கைக்குப் பெரிய அளவில் நன்மை பயக்காது என்றே தோன்றுகிறது.
மாநிலத்தில் கரோனா வைரஸ் முழுமையாக நீங்கிவிட்டது எனச் சொல்லமுடியவில்லை. ஆனால், நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது.
சிகிச்சை அளித்து குணப்படுத்துவதைவிட தடுப்பு சிறந்தது. பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது குறைந்தது இன்னும் ஆறு மாதங்களுக்கு ஒரு பழக்கமாக வைத்திருக்க வேண்டியது ஆகும்''.
இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.