Last Updated : 20 Dec, 2020 01:30 PM

 

Published : 20 Dec 2020 01:30 PM
Last Updated : 20 Dec 2020 01:30 PM

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் அரசியல் கட்சிகள் எதுவுமில்லை: விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு பிரதமருக்குக் கடிதம்

டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் எந்தவொரு அரசியல் கட்சியும் இல்லை என்று விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளது.

தலைநகர் டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில், அவர்களது போராட்டம் இன்று 25-வது நாளை எட்டியுள்ளது.

இதற்கிடையில் பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை மத்தியப் பிரதேச விவசாயிகளின் மெய்நிகர் கூட்டத்தில் உரையாற்றிய போது, ''புதிய வேளாண் சீர்திருத்தங்கள் ஒரே நாளில் உருவானதல்ல. விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இருபதாண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் முயற்சி இது; ஆனால், டெல்லியில் போராடும் விவசாயிகளை அரசியல் ஆதாயங்களுக்காக எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன'' என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும்விதமாக டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்திவரும் சுமார் 40 தொழிற்சங்கங்களில் ஒன்றான 'அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு' ( ஏஐகேஎஸ்சிசி) பிரதமர் மோடி மற்றும் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோருக்கு இந்தி மொழியில் தனித்தனி கடிதங்களை எழுதியுள்ளது.

இதுகுறித்து பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஏஐகேஎஸ்சிசி கூறியுள்ளதாவது:

''டெல்லி எல்லைகளில் நடந்துவரும் விவசாயிகளின் போராட்டத்தின் பின்னணியில் எந்த அரசியல் கட்சியும் இலலை என்பதைத் தங்களுக்குத் தெளிவபடுத்த விரும்புகிறோம்.

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் எதிர்க்கட்சிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கம் தவறாகக் கருதுகிறது. உண்மை என்னவென்றால் அரசியல் கட்சிகளின் கருத்துகளை மாற்றிக்கொள்ளும்படி விவசாயப் போராட்டம்தான் அவர்களைக் கட்டாயப்படுத்தியுள்ளது.

மற்றபடி அரசியல் கட்சிகள் எங்கள் போராட்டத்தைத் தூண்டியது என்ற தங்கள் (பிரதமர்) கூற்று முற்றிலும் தவறானது.

போராட்டம் நடத்திவரும் விவசாய சங்கங்கள் மற்றும் குழுக்களின் எந்தவொரு கோரிக்கையும் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைக்கப்படவில்லை என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்''.

இவ்வாறு அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x