Published : 20 Dec 2020 03:13 AM
Last Updated : 20 Dec 2020 03:13 AM

விவசாயிகளுக்கு உதவுவதற்குத்தான் வேளாண் சீர்திருத்தங்கள்- வர்த்தக நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

அசோசேம் பவுண்டேஷன் வார நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, தொழிலதிபர் ரத்தன் டாடாவுடன் உரையாடினார். படம்: பிடிஐ

புதுடெல்லி

விவசாயத் துறையில் கொண்டு வரப்படும் சீர்திருத்தங்கள் அனைத்துமே விவசாயிகளுக்கு உதவுவதற்காகத்தான் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 24-வதுநாளை எட்டியுள்ள நிலையில் பிரதமர் இத்தகவலைத் தெரிவித்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

தனது அரசு கொண்டு வரும் சீர்திருத்தங்கள் சிறந்த பலனை அளிக்கத் தொடங்கியுள்ளன. ஆறு மாதங்களுக்கு முன்பு உற்பத்தித் துறை மற்றும் தொழில் துறையில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்கள் தற்போது சிறந்த பயனை அளிக்கத் தொடங்கியுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

வர்த்தக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் மேலும் கூறியதாவது:

இந்தியாவில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்று வெளிநாட்டு நிறுவனங்கள் கருதிய காலம் மாறிவிட்டது. ஏன் இந்தியாவில் முதலீடு செய்ய கூடாது என்ற மனோநிலை தற்போது உருவாகி வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில்தொழில் தொடங்க ஆரம்பித்துள்ளன.

அந்நிய நேரடி முதலீடு மற்றும்பங்குகளில் அந்நிய நிறுவனங்களின் முதலீடு ஆகியன அதிகரித்துள்ளன. கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் காலத்தில் கூட இந்தியாவின் மீது நம்பிக்கை வைத்து வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

வேளாண் துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள 6 மாதங்களுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. அதன் பலன் விவசாயிகளுக்குக் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இவ்வாறு மோடி கூறினார்.

பின்னர் தனது ட்விட்டர் பதிவில், ‘‘வேளாண் சீர்திருத்தங்களை மக்கள் படித்து அதன் மூலம் விவசாயிகளுக்கு எத்தகைய பயன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டு அந்த விஷயத்தை பலருக்கும் தெரிவிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி உள்ளார்.

இ-புத்தகமாக வந்துள்ள அதில் கிராபிக்ஸ் வடிவிலும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. வேளாண் சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு எந்த விதத்தில் பலனளிக்கும் என்பது விவரிக்கப்பட்டுள்ளது. நமோ செயலியில் உங்கள் குரல் மற்றும் கருத்துகளை பிறருக்கு பகிர்ந்து கொள்ளும் வசதியும் உள்ளது. ``படியுங்கள் பலருக்கு பகிருங்கள்’’, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இணைய புத்தகத்தில் உள்ள சில பக்கங்களை அவர் தனது ட்விட்டர் பதிவிலும் பதிவேற்றியுள்ளார்.

விவசாயிகளுடன் எந்த பிரச்சினை குறித்தும் பேசத் தயார் என்றும் அவர் சுட்டிக்காட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x