Published : 19 Dec 2020 01:06 PM
Last Updated : 19 Dec 2020 01:06 PM

காங்கிரஸ் தலைமை பிரச்சினை முடிவுக்கு வருமா? - அதிருப்தி தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை

கோப்புப் படம்

புதுடெல்லி

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என அதிருப்தி தலைவர்கள் சிலர் வலியறுத்தி வரும் நிலையில் அவர்களுடன் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தொடர்ந்து கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். சோனியா காந்தி காங்கிரஸின் இடைக்காலத் தலைவரானார். பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸின் தொடர் தோல்வி, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா விலகியதால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது போன்றவற்றால் கட்சித் தலைமைக்கு எதிராக மூத்த தலைவர்கள் குரல் எழுப்பினர்.

கட்சியை பலப்படுத்த முழுநேரத் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கோரி சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இதில் மூத்த தலைவர்கள் கபில் சிபல், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட 23 தலைவர்கள் கையெழுத்திட்டதாக தகவல்கள் வெளியானது. சமீபத்தில் பிஹார் தேர்தல் தோல்விக்கு பின்னர், காங்கிரஸ் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கபில் சிபல் கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில், அதிருப்தி தலைவர்களுடன் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தக் கூட்டத்தில் ராகுல் மற்றும் பிரியங்காவும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் அதிருப்தி தலைவர்களான மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத், துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பிரித்விராஜ் சவான், முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளதாக தெரிகிறது.

இவர்கள் தவிர முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டத்தில் முக்கியமாக கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ராகுல் காந்தியை தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என சிலர் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து விரிவான விவாதம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த மாநிலங்களில் கூட்டணி தொடர்பாகவும் விவாதிக்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x