Published : 19 Dec 2020 12:37 PM
Last Updated : 19 Dec 2020 12:37 PM

இந்தியாவில் ஏன் இருக்கக்கூடாது என்ற நிலைக்கு நாம் நகர வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

இந்தியாவில் ஏன் என்ற நிலையில் இருந்து இந்தியாவில் ஏன் இருக்கக்கூடாது என்ற நிலையை நோக்கி நாம் நகர வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பான அசோச்சேம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வர்த்தக சங்கங்களால் 1920-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

400 சங்கங்கள் மற்றும் வர்த்தக அமைப்புகளை தன்னகத்தே கொண்ட அசோச்சேம், நாடு முழுவதுமுள்ள 4.5 இலட்சம் உறுப்பினரகளுக்கு தனது சேவைகளை வழங்குகிறது. இந்தியத் தொழில் துறையின் அறிவுசார் ஊற்றாக அசோச்சேம் விளங்குகிறது.

அசோச்சேம் நிறுவன வாரத்தையொட்டி இன்று சிறப்பு மாநாடு காணொலி மூலம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது இந்த நூற்றாண்டின் அசோச்சேம் நிறுவனம் விருதை டாட்டா குழுமத்தின் சார்பாக ரத்தன் டாட்டாவுக்கு பிரதமர் மோடி வழங்கினார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:

உலகம் மற்றொரு தொழில்புரட்சிக்கு தயாராகி வருகிறது. இதனால், நமது நாடு நிர்ணயித்த இலக்குகளை அடைய நாம் தயாராகி அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். கரோனா காலத்திலும் இந்தியா தனது பொருளாதாரத்தை திறம்பட கையாண்டது.

உலக நாடுகள் இந்திய பொருளாதாரத்தை நம்புகின்றன. கரோனா காலத்தில், உலக நாடுகள் பல தடைகளை சந்தித்த போதும், இந்தியாவில் அன்னிய முதலீடு அதிகரித்தது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறைகளில் முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும். அந்த துறையில், தனியார் துறையினர் முதலீடு செய்ய வேண்டும்.

நமது நாடு தன்னிறைவு இந்தியாவாக மாறுவதில் மட்டும் சவால் இல்லை. அதனை எவ்வளவு காலத்தில் அடைகிறோம் என்பது முக்கியம். தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா மாற தொழில்துறையினர் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

இந்தியா குறித்த உலக நாடுகளின் பார்வையை, மத்திய அரசு செய்த சீர்திருத்தங்கள் மாற்றியுள்ளன. இந்தியாவின் வளர்ச்சியில் டாடா நிறுவனம் முக்கிய பங்காற்றியுள்ளது.

இந்தியாவில் ஏன் என்ற நிலையில் இருந்து இந்தியாவில் ஏன் இருக்கக்கூடாது என்ற நிலையை நோக்கி நாம் நகர வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x