

கோவா விடுதலை பெற்ற 60-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு கோவா மக்களுக்கு பிரதமர் மோடி சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோவா மாநிலம், 450 ஆண்டுகால போர்ச்சுகீசியர்கள் ஆட்சியிலிருந்து டிசம்பர் 19, 1961 அன்று விடுதலை பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இந்தநாள் கோவா விடுதலை நாளாகக் கொண்டாடப்படுகிறது.
பனாஜியில், 60- வது கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு மாநில அரசு விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது. இன்று மாலை நடைபெறும் சிறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்கிறார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
"கோவா விடுதலை தின சிறப்பு நிகழ்விவைக் கொண்டாடும், கோவாவின் எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள். இன்றைய தினத்தில் கோவா விடுதலைக்காக கடுமையாக உழைத்தவர்களின் துணிச்சலை பெருமையுடன் நினைவு கூர்கிறோம்.
அடுத்து வரும் ஆண்டுகளில் மாநிலத்தின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்காக பிரார்த்திக்கிறேன்.”
இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில், ''பிரதமர் நரேந்திர மோடிக்கு கோவா மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம், உங்கள் தொடர்ச்சியான ஆதரவுடன், கோவா தொடர்ந்து வளர்ச்சியடையும், வளர்ச்சியில் புதிய உயரங்களை எட்டும்'' என்று தெரிவித்துள்ளார்.