

தம் மருமகள்களை கொடுமைப்படுத்தும் குடும்பங்களை சமூகப் புறக்கணிப்பு செய்ய வேண்டும் என காஷ்மீரில் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த பிரச்சனை அம் மாநிலத்தை அதிகமாகி வருவதை தொடர்ந்து அதன் ஹுரியத் அமைப்பின் தலைவரும் ஸ்ரீநகர் ஜாமியா மசூதியின் தலைமை இமாமான மீர்வாஜ் உமர் பாரூக் வலியுறுத்தியுள்ளார்.
காஷ்மீரில் முஸ்லீம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமாகி வருவதாகக் கருதப்படுகிறது. இவை ஆண் குழந்தை பெறாதது மற்றும் வரதட்சணை தராதது ஆகியவற்றின் காரணமாகவே நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. கடந்த இரு வருடங்களில் சுமார் 1200 வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன. தம் குடும்பங்களில் மணமாகி வந்த மருமகள்கள் மீது நடந்து வரும் இந்த கொடுமைகளில் ஒன்றாக, கடந்த வாரம் முடிந்த பக்ரீத் அன்று ஸ்ரீநகரில் 34 வயது பெண் ஒருவர் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரு பெண் குழந்தைகள் பெற்ற இவருக்கு ஆண் குழந்தை பெறவில்லை என கொடுமைப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதை கண்டித்து அப்பெண்ணிற்கு ஆதரவாக காஷ்மீர் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இந்த வழக்கில் அப்பெண்ணின் கணவர், மாமியார் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து ஸ்ரீநகரின் ஜாமியா மசூதியில் நேற்று நடைபெற்ற வெள்ளிக்கிழமை தொழுகையின் போது உரையாற்றிய மிர்வாஜ் உமர் பாரூக், ‘இங்கு அதிகமாக கொடுமைப்படுத்தப்பட்டு வரும் மருமகள்களில் சுமார் 20 சதவிகிதம் பேர் மட்டுமே புகார் அளிக்க முன் வருகின்றனர்.
மற்றவர்களையும் புகார் அளிக்கும்படி நாம் ஊக்கப்படுத்தினாலும் அவர்களை காக்க ஒரு சமூக பாதுகாப்பும் அளிக்கப்படுவது அவசியம். இதற்காக சம்மந்தப்பட்டு பகுதிகளின் மசூதிகளின் இமாம்கள் முன் வந்து கொடுமைப்படுத்தும் குடும்பங்களை சமூக புறக்கணிப்பு செய்யும்படி உத்தரவிட வேண்டும். இதற்கு ஏதுவாக பாதிக்கப்பட்டவர்கள் தமது பகுதி மசூதிகளின் இமாம்களை அணுக வேண்டும்.’ என வலியுறுத்தினார்.
மீர்வாஜின் இந்த கருத்திற்கு காஷ்மீர் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து ஆதரவு கிளம்பியுள்ளது.