Published : 19 Dec 2020 03:14 AM
Last Updated : 19 Dec 2020 03:14 AM

முன்இருக்கை பயணிகளுக்கு கார்களில் உயிர் காக்கும் ‘ஏர் பேக்’ கட்டாயம்: விரைவில் சட்டம் கொண்டு வர அரசு முடிவு

அனைத்து கார்களிலும் முன் இருக்கை பயணிகளுக்கு ‘ஏர் பேக்’கட்டாயம் இருக்க வேண்டும் என்பதற்கான சட்டம் விரைவிலேயே அமல்படுத்தப்பட உள்ளது.

கார் ஓட்டுநருக்கு கட்டாயம் ‘ஏர் பேக்’ இருக்க வேண்டும் என்ற விதிமுறை 2019-ம் ஆண்டுஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது முன் இருக்கையில் பயணிப்போரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஏர் பேக் வசதியை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.

வாகன தரம் குறித்து ஆராயும் உயர்நிலை தொழில்நுட்பக் குழு அளித்த இந்த பரிந்துரையை செயல்படுத்தும் விதமாக வரைவு அறிவிக்கையை அனைத்து கார்களுக்கான தரச் சான்றாக (ஏஐஎஸ்) நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் வாகன பாதுகாப்பு தொடர்பான ஒருமித்த கருத்து உருவாக்கத்தில் காரில் பயணிப்போரின் உயிருக்கு பாதிப்புஏற்படாத வகையில் வாகனம் பாதுகாப்பானதாக தயாரிக்கப்பட வேண்டும் என்று கருதப்படுகிறது. அந்த வகையில் வாகன பாதுகாப்பில் எத்தகைய சமரசமும் செய்து கொள்ள முடியாது என்று அரசு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்புதிய விதிமுறையை அமல்படுத்துவது குறித்து மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.ஆனால், இதை அமல்படுத்த ஓராண்டு அளிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓட்டுநருக்கு மட்டும் ஏர் பேக் வசதி இருப்பதால் முன் இருக்கையில் பயணிப்போரின் உயிருக்கு பாதுகாப்பு குறையும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் விபத்தின் போது மிக மோசமாக காயமடையவும் வாய்ப்பு உள்ளது. பல சந்தர்ப்பங்களில் முன் இருக்கை பயணிகள் உயிரிழப்பதும் நிகழ்ந்துள்ளது. வேகக் கட்டுப்பாட்டு எச்சரிக்கை கருவி, பின்புற பார்க்கிங் சென்சார், சீட் பெல்ட் உணர்த்தும் வசதி உள்ளிட்டவற்றை சேர்க்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவைஅனைத்துமே மிகக் குறைந்தசெலவு பிடிக்கும் விஷயங்களாகும். இவை அனைத்தையும் விட முன் இருக்கை பயணியின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும் ஏர் பேக் வசதியை அளிப்பது கட்டாயம் என இதுவரை சட்டம் கொண்டு வரப்படவில்லை.

வர்த்தக ரீதியில் பயன்படுத்தும் அனைத்து நான்கு சக்கர வாகனங்களில் குழந்தைகள் லாக் வசதியை அனுமதிக்க கூடாது என்று ஏஐஎஸ் பரிந்துரைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x