

நாட்டையே உலுக்கிய உத்தரப்பிரதேசம் ஹாத்ரஸைச் சேர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் மீது சிபிஐ இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது தலித் பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த மாதம் 14-ம் தேதி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்தப் பெண் சிகிச்சைக்காக டெல்லி சப்தார் ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இதையடுத்து, அந்தப் பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக ஹாத்ரஸுக்கு இரவோடு இரவாகக் கொண்டுவந்து போலீஸார் தகனம் செய்தனர்.
இந்தச் சம்பவத்தில் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசையும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலையையும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி கடுமையாகச் சாடினர். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்கச் சென்ற ராகுல் காந்தி,பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டனர்.
பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் நெருக்கடி வந்ததைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி பரிந்துரைத்தார். இதையடுத்து காஜியாபாத் சிபிஐ பிரிவினர் விசாரணயைத் தொடங்கினர்.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அமைப்பினர், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண் சிகிச்சைப் பெற்ற ஜவஹர்லால் நேரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இந்த வழக்கில் சந்தீப், லவகுஷ், ரவி, ராமும் ஆகியோர் உ.பி. போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் சிபிஐ கூட்டுப்பலாத்காரம், கொலை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் விசாரணை முடித்த சிபிஐ முதல் கட்ட குற்றப்பத்திரிகையை ஹாத்ரஸ் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர்.
குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் கூறுகையில் “ சந்தீப், லவகுஷ், ரவி, ராமுஆகியோர் மீது கூட்டுப்பலாத்காரம், கொலைக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.