

மேற்கு வங்கத்தில் நடந்த கலவர வழக்கில் பாஜக தலைவர்கள் முகுல் ராய், எம்.பி. கைலாஷ் விஜய்வர்க்கியா, அர்ஜுன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து மேற்கு வங்க போலீஸாருக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
பாஜக தலைவர்கள் முகுல் ராய், எம்.பி. கைலாஷ் விஜய்வர்க்கியா, அர்ஜுன் சிங், சவுரங்சிங், பவன்குமார் சிங் ஆகியோர் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இதில் , மேற்குவங்க போலீஸார் எங்கள் மீது பொய்யான கிரிமினல் வழக்குகளைப் பதிவு செய்து, அரசியல் நடவடிக்கையில் ஈடுபடவிடாமல் தடுக்கிறார்கள். அந்தப் பொய்யான வழக்குளில் கைது செய்வதிலிருந்து இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வர், ரிஷிகேஷ் ராய் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
பாஜக தலைவர் அர்ஜுன் சிங் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகல் ரோகத்கி ஆஜராகினார் அவர் வாதிடுகையில் “ திரிணமூல் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு அர்ஜுன் சிங் சென்றபின், கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து அர்ஜுன் சிங் மீது 64 கிரிமினல் வழக்குகளை போலீஸார் பதிவு செய்துள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது அதன் பின் தொடர்ச்சியாக வழக்குகள் பதிவாகின” எனத் தெரிவித்தார்.
பாஜக எம்.பி. விஜய் வர்க்கியா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “ மத்தியப்பிரதேச எம்.பி.யான விஜய்வர்க்கியா கட்சி தொடர்பாக மேற்கு வங்கத்துக்கு அடிக்கடி வந்து கொண்டிருக்கிறார்.
ஆனால், அவருக்கு எதிராகப் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கின்றனர். இந்த வழக்குகள் அனைத்தையும் சுயமான விசாரணை அமைப்புக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
வாதங்களைக் கேட்ட நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு “ பாஜக தலைவர்கள் 5 பேரும் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்து, தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட பொய்யான வழக்குகளில் இருந்து கைது செய்யாமல் இருக்க இடைக்காலத் தடை கோருகிறார்கள். இதற்கு மே.வங்க அரசு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த மனுவின் அடுத்த கட்ட விசாரணையை 2021ம் ஆண்டு ஜனவரி 2-வது வாரத்துக்கு ஒத்திவைக்கிறோம். அதுவரை 5 தலைவர்களுக்கு எதிராக போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது, கைது செய்யவும் கூடாது.
திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பாஜக தலைவர் கபீர் சங்கர் போஸின் பாதுகாவலர்களுக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பான அறிக்கையை சீல் வைக்கப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்ய வேண்டும்.” என உத்தரவிட்டனர்.