

உத்தரப்பிரதேசத்தின் காப் எனும் சமூகப் பஞ்சாயத்தாரும் இன்று முதல் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இதனால், டெல்லியின் எல்லையில் கூடுதலாகப் பத்து லட்சம் பேர் குவிய உள்ளனர்
டெல்லியில் கடந்த 23 நாட்களாக வட மாநில விவசாயிகல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு நாடு முழுவதிலும் விவசாயிகள் உள்ளிட்டப் பல்வேறு தரப்பினர் ஆதரவு கிடைத்து வருகிறது.
மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கானதாக இப்போராட்டம் அமைந்துள்ளது. இதில் ஐந்து முறை மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தன.
இதனால், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இப்போராட்டத்தில் இன்று உ.பி.யின் 15 காப் பஞ்சாயத்தார் இணைகின்றனர். இதன் தலைவர்கள் ஒவ்வொருவரும் தன்னுடன் ஆயிரக்கணக்காக ஆதரவாளர்களையும், விவசாயிகளையும் அழைத்து வருகின்றனர்.
இது குறித்து ;இந்து தமிழ் திசை’ இணையத்திடம் உ.பி.யின் பாரதிய கிஸான் யூனியன் தலைவரான ராகேஷ் திகாய்த் கூறும்போது, ‘தொடர்ந்து எங்கள் போராட்டத்தில் தம் ஆதரவு விவசாயிகளை சிலரை ஊடுருவ வைத்து குழப்பத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயல்கிறது.
பேச்சுவார்த்தை எனும் பெயரில் விலாசம் இல்லாதவர்களை அழைத்து போராட்டத்தை பிளவை ஏற்படுத்தவும் அரசு முயல்கிறது. எனவே, எங்கள் கோரிக்கையை ஏற்று நேரடியாகப் பங்கு கொள்ளும் காப் பஞ்சாயத்தாருடன் சுமார் 10 லட்சம் ஆதரவாளர்களும் வருகின்றனர்.
மேலும் பல லட்சம் கிராமத்தினரும் எங்களுடன் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களை மத்திய அரசு எங்களுக்கு செவி சாய்ப்பதை பொறுத்து
அழைத்துக் கொள்வதாகக் கூறி வைத்துள்ளோம்.’ எனத் தெரிவித்தார்.
டெல்லியில் போராட்டம் துவங்கியது முதல் இந்த காப் பஞ்சாயத்துக்கள் விவசாயிகளுக்கு மறைமுக ஆதரவளித்து வந்தனர். இதற்காக தம் சார்பில் உணவு, தானியங்கள் படுக்கை மற்றும் கட்டில்கள் அனுப்பி வைத்திருந்தனர்.
உ.பி.யின் மேற்கு பகுதி, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் அதிகம் வாழும் ஜாட் சமூகத்தின் முக்கிய அமைப்பாகக் கருதப்படுவது இந்த காப் பஞ்சாயத்து. ஜாட் சமூகத்திலுள்ள ஒவ்வொரு கோத்ரத்திற்கும் ஏற்றவாறு ஒரு பஞ்சாயத்து செயல்படுகிறது.
இவ்வாறு உள்ள 85 கோத்ரப் பஞ்சாயத்துக்களும் இணைந்து 15 காப் பஞ்சாயத்துக்களுக்கக செயல்படுகின்றன. இதன் தலைவர்கள் அனைவரும் அறுபது வயதிற்கும் அதிகமானவர்கள்.
இவர்கள் உபியின் மேற்கு பகுதி மாவட்ட கிராமங்களில் நடைபெறும் பெரும்பாலானப் பிரச்சனைகளை தங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்கின்றனர். இவற்ற்றில் சில சர்ச்சைக்குரிய தீர்ப்புகளால் அவ்வப்போது பெரிய அளவில் செய்திகளாகி விடுவதும் உண்டு.