

நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் மாற்றம் அவசியமென மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், பொதலகூரு பகுதியில் ரூ.3.80 கோடி செலவில் 30 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய வெங்கய்ய நாயுடு, அங்கு நடந்த பொதுகூட்டத்தில் பேசியதாவது:
நமது நாட்டில் 11 மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினாலும், அவை வளர்ச்சி பெறவில்லை. மாநில வளர்ச்சிக்கு சிறப்பு அந்தஸ்தை விட, தொழிற்சாலைகள், அணைகள் போன்றவையே முக்கியம். தற்போது அந்த 11 மாநிலங்கள் பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசை நாடி வருகின்றன. நாட்டில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி, அதன்மூலம் மக்கள் பயனடைய வேண்டும். இதுவே மத்திய அரசின் கொள்கை.
மாணவர்களிடம் உள்ள திறனை வெளிக்கொண்டு வரவேண்டும். ஆரம்ப சுகாதார மையங்களில் வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இதற்கான மாற்றம் தேவை.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஆந்திர மாநில சுகாதார துறை அமைச்சர் காமிநேனி நிவாஸ், மாவட்ட ஆட்சியர் ஜானகி மற்றும் எம்.பி, எம்.எல்.ஏக்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.