

அயோத்தியில் முஸ்லிம்களுக்கான 5 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட இருக்கும் மசூதிக்கு குடியரசு தினத்தன்று அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இதற்கான வரைபடம் அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது.
அயோத்தியின் மேல்முறையீட்டு வழக்கில் கடந்த வருடம் நவம்பரில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பளித்தது. இதில், பிரச்சனைக்குரிய முழுநிலத்தையும் ராமர் கோயிலுக்கு ஒதுக்கி, அதற்கானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அங்கு இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு ஈடாக ஐந்து ஏக்கர் நிலம் உத்திரப்பிரதேச சன்னி முஸ்லிம் மத்திய வஃக்பு வாரியத்தினரிடம் அம்மாநில அரசால் ஒப்படைக்கப்பட்டது. ராமஜென்மபூமி வளாகத்தில் இருந்து 25 கி.மீ தொலைவிலுள்ள தனிப்பூர் கிராமத்தில் இந்த நிலம் அமைந்துள்ளது.
இங்கு மசூதியை கட்ட வேண்டி, சன்னி வஃக்பு வாரியம் சார்பில் இந்தோ இஸ்லாமிக் கல்சுரல் பவுண்டேஷன்(ஐஐசிஎப்) அறக்கட்டளை ஆறு மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. இதன் சார்பில் மசூதி அமைப்பதற்கானத் துவக்கக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து ஐஐசிஎப் அறக்கட்டளையின் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான அத்தர் உசைன் கூறும்போது,
’சுமார் 70 வருடங்களுக்கு முன்பாக நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் அமலான நாளில் மசூதிக்கு அடிக்கல்நாட்ட உள்ளோம்.
அரைவட்ட வடிவில் அமைக்கப்படும் மசூதியில் ஒரே நேரத்தில் சுமார் 2000 பேர் தொழுகை நடத்த முடியும். பேராசிரியர் எஸ்.எம்.அக்தர் வடிவமைத்த வரைபடம் உள்ளிட்ட விவரங்கள் அடுத்த வாரம் வெளியாக உள்ளது.’ எனத் தெரிவித்தார்.
300 படுக்கைகள் கொண்ட உயர்தர சிகிச்சைக்கான இலவச மருத்துவமனை, உயர்கல்விக்கான ஆய்வு மையம், நூலகம், அருங்காட்சியகம், சமுதாய உணவுக்கூடம் ஆகியவைகளும் மசூதியுடன் கட்டப்பட உள்ளன.
இதில், மசூதி மட்டுமே முஸ்லிம்களுக்கானதாக இருக்கும். மற்றவைகள் அயோத்தி வந்து செல்லும் ராமபக்தர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கு பலனை தருவதாக அமைய உள்ளது.
இதற்காக பொதுமக்களிடம் நன்கொடை வசூலிக்கப்பட உள்ளது. இந்த நன்கொடையை வெளிநாடுகளில் இருந்தும் பெற மத்திய அரசிடம் ஐஐசிஎப் அமைப்பினர் அனுமதி கோரியுள்ளனர்.