

உத்தரப் பிரதேசம் மாநிலம் தாத்ரிக்கு உட்பட்ட கவுதம புத்த நகரில் நடந்த சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் வீடியோ வடிவில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவுதம புத்த நகரில் தலித் சமூகத்தைச் சேர்ந்த தம்பதியை போலீஸார் பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இன்று காலை முதல் வேகமாக பரவி வரும் அந்த வீடியோ குறித்து சிலர் கூறும்போது, "கவுத புத்த நகரைச் சேர்ந்தவர் சுனில் கவுதம். தலித் சமூகத்தைச் சேர்ந்த இவரும் இவரது மனைவியும் தாங்கூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர். ஆனால், அவர்கள் புகாரை ஏற்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
தொடர்ந்து இருவரும் தங்கள் புகாரை பதிவு செய்யுமாறு வலியுறுத்தியதால் போலீஸார் இருவரையும் பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணப்படுத்தியுள்ளனர். இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்" எனக் கூறுகின்றனர்.
ஆனால், அந்த வீடியோவை பார்த்த வேறு சிலர், "போலீஸார் புகாரை ஏற்க மறுத்ததால் தம்பதிகள் தாமாகவே ஆடைகளை களைந்து எதிர்ப்பை பதிவு செய்தனர். அப்போது போலீஸார் அவர்களை இடைமறித்து வலுக்கட்டாயமாக கைது செய்தனர்" என்று கூறுகின்றனர்.
இந்நிலையில், கிரேட் நொய்டா காவல் சரகத்துக்குட்பட்ட மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "கவுதம் இதுபோன்ற சர்ச்சைகளில் அடிக்கடி ஈடுபடுவது வழக்கம். எஸ்.சி/எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை துஷ்பிரயேகம் செய்து மக்களை மிரட்டி அதன் மூகம் சுய லாபம் அடைய முயற்சிப்பார்" எனக் குற்றம்சாட்டுகிறார்.
இதற்கிடையில், உத்தரப் பிரதேச அரசின் அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில், "கவுதம புத்த நகர் சம்பவம் ஜோடிக்கப்பட்டது. அந்த வீடியோவில் உள்ள இருவரும் வேண்டுமென்றே அரங்கேற்றிய சம்பவம் அது" என தெளிவுபடுத்தியுள்ளது.
நொய்டா போலீஸ் எஸ்.பி., "போலீஸாரிடம் அந்த சம்பவத்தின் முழு வீடியோ பதிவும் இருக்கிறது. இருவரும் அவர்களே ஆடைகளை களைந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர். போலீஸார் மாண்பை குறைக்கும் வகையில் வேண்டுமென்றே சமூக வலைதளங்களில் இந்த வீடியோ உலாவ விடப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார்.