

ஆந்திரப் பிரதேசத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில், தெலுங்குதேசம் கட்சிக்கு பாஜக 24 மணி நேர கெடு விதித்துள்ளது.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு கூறுகையில், "தெலுங்கு தேசம் கட்சியுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. இதுவிஷயத்தில் இதற்கு மேலும் காத்திருக்க முடியாது. திங்கள்கிழமை (இன்று) டெல்லியில் நடைபெற உள்ள கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். சீமாந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய பகுதிகளில் தேவைப்பட்டால் அனைத்து தொகுதியிலும் தனித்து போட்டியிடவும் பாஜக தயாராக உள்ளது. அதேநேரம் தொகுதிப் பங்கீடு விஷயத்தில் விட்டுக்கொடுக்கவும் தயாராக உள்ளோம் என நான் ஏற்கெனவே கூறியிருந்தேன்" என்றார்.
வரும் மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலில் சீமாந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து பாஜகவும் தெலுங்கு தேசம் கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
ஹைதராபாதில் முகாமிட்டுள்ள பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் தெலுங்கு தேசம் கட்சி பிரதிநிதிகளுடன் பல்வேறு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும், தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை.
இதற்கிடையே, தெலங்கானாவில் தனித்து போட்டியிடவும் தயாராக உள்ளோம் என அப்பகுதி பாஜக தலைவர் ஜி.கிஷன் ரெட்டி வெள்ளிக்கிழமை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.