இந்திய பொறியாளருக்கு ஐ.நா.வின் உலக இளம் சாதனையாளர் விருது

வித்யுத் மோகன்
வித்யுத் மோகன்
Updated on
1 min read

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் பிரிவு 2020-ம் ஆண்டின் உலக இளம் சாதனையாளர்கள் பட்டியலைத் தேர்வு செய்துள்ளது. இதில் இந்தியப் பொறியாளர் வித்யுத் மோகன் என்பவரும் இடம் பெற்றுள்ளார்.

தற்போதுள்ள சுற்றுச்சூழல் சவால்களில் இருந்தும் காலநிலை மாற்ற நெருக்கடிகளில் இருந்தும் உலகைக் காப்பற்றக் கூடிய ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக 7 இளைஞர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை உலக இளம் சாதனையாளர்கள் விருதை வழங்கியுள்ளது.

இதில் இந்திய பொறியாளர் வித்யுத் மோகன் என்பவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 29 வயதாகும் இவர் ‘தகாச்சர்' என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.

இவர் அறுவடைக்குப் பிறகான விவசாய கழிவுகளைத் தீயிட்டு எரிக்காமல், அவற்றில் இருந்து ஆக்டிவேட்டட் கார்பன் போன்ற மதிப்புக் கூட்டு பொருட்களை உற்பத்தி செய்யும் முறையை கண்டுபிடித்ததற்காக இந்த விருதுக்கு அடையாளம் காணப்பட்டு உள்ளார்.

வழக்கமாக விவசாய கழிவுகள் அப்படியே தீயிலிட்டு எரிக்கப்படும். இதனால் சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு உள்ளாகி வருகிறது. இதைத் தடுக்கவும் அதேசமயம் ஆக்கப்பூர்வமாக செயல்படுவதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் வித்யுத் மோகன் வழி செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘எனக்கு ஆற்றல் சார்ந்த துறையில் தீராத தேடல் இருந்து வந்தது. அதேசமயம் ஏழைகளுக்கு பொருளாதார வாய்ப்புகளை எப்படி எல்லாம் சாத்தியப்படுத்த முடியும் என்பது குறித்தும் ஆராய்ந்து வந்தேன்.

இந்தக் கேள்விகளுக்கு கிடைத்த பதில்தான் விவசாயக் கழிவுகளில் இருந்து மதிப்புக் கூட்டுப் பொருட்களை உருவாக்கும் திட்டம். சுற்றுச்சூழலையும் பாதுகாத்து அதேசமயம் பொருளாதாரத்தையும் உயர்த்திக் கொள்வதற்கான முறைகளைக் கண்டறியும் வேட்கைக்கு கிடைத்த பரிசு இது’’ என்றார்.

வித்யுத் மோகன் மற்றும் கெவின் கங் இணைந்து 2018-ல் தொடங்கிய தகாச்சர் நிறுவனம் இதுவரை 4,500 விவசாயிகளிடம் இருந்து 3,000 டன்னுக்கும் மேலான விவசாய கழிவுகளைப் பெற்று அவற்றில் இருந்து மதிப்புக் கூட்டுப் பொருட்களை தயாரித்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in