

தொழிலதிபரும் முன்னாள் காதலருமான நெஸ் வாடியா (44) மீது பாலியல் புகார் கொடுத்திருந்த ஹிந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா (39) அமெரிக்காவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினார். இதையடுத்து அடுத்த இரு தினங்களில் அவரது வாக்குமூலத்தை போலீஸார் பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெஸ் வாடியா மீது பிரீத்தி ஜிந்தா கடந்த 12-ம் தேதி இரவு மும்பை போலீஸில் புகார் செய்தார். மே 30-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே ஐபிஎல் போட்டி நடைபெற்றது. அப்போது வாடியா தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்தப் புகாரில் கூறியிருந்தார்.
புகார் அளித்ததும் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றதால் பிரீத்தியிடம் போலீஸாரால் வாக்குமூலம் பதிவு செய்ய முடியவில்லை. இந்நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை மதியம் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்கள் கேள்வி கேட்க முற்பட்டபோது, அவர் பேசாமல் சென்றுவிட்டார்.
நெஸ் வாடியா மீதான புகார் குறித்து பிரீத்தியிடம் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை வாக்குமூலம் பதிவு செய்ய இருப்பதாக மும்பை போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்தப் புகார் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) செயலாளர் சஞ்சய் படேலின் வாக்குமூலத்தை போலீஸார் சனிக்கிழமை பதிவு செய்தனர். ஆனால், தன் மீதான புகாரை நெஸ் வாடியா மறுத்துள்ளார்.
மேலும், ரவுடி கும்பலைச் சேர்ந்த ரவி புஜாரியிடமிருந்து நெஸ் வாடியாவின் தந்தை நுஸ்லி வாடியாவுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
காதலர்களாக இருந்த நெஸ் வாடியாவும் பிரீத்தி ஜிந்தாவும் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தனர். ஆனாலும் இருவரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களாக இருப்பதால் இதுதொடர்பாக மட்டும் தொடர்பில் இருந்து வந்தனர்.