

தனக்கென்று யாருமற்ற நிலையில் செல்ல நாயுடன் வாழ்ந்துவந்த கைவிடப்பட்ட 10 வயதுச் சிறுவனை காவல்துறை அரவணைத்துக் கொண்ட சம்பவம் உ.பி.யில் நடந்துள்ளது.
வாழ்க்கையில் திடீரென ஏற்படும் எதிர்பாராத சம்பவங்களால் குழந்தைகள் கைவிடப்படும் அவல நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். எங்கிருந்தாவது ஒரு ஆதரவுக் கரம் நீளாதா என்ற ஏக்கத்துடன் அவர்களது கண்கள் உலகைக் காணும். அப்படிப்பட்ட நேரங்களில் சில நல்ல விஷயங்களும் நடந்துவிடுவது உண்டு. அத்தகைய ஒரு அரவணைப்பை உ.பி. காவல்துறை நிகழ்த்தியுள்ளது.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய முசாபர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் குல்தீப் சிங் கூறியதாவது:
''10 வயதுச் சிறுவன் ஒரு நாயுடன் தூங்கிக் கொண்டிருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. முசாபர் நகரின் காலாபர் வட்டாரத்தில் சிறுவன் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தோம். அதன் பிறகு அவருக்கு குளிர்கால உடைகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்கினோம்.
பின்னர் சிறுவனைப் பள்ளியில் சேர்ப்பதற்கான பணிகளை எங்கள் மூத்த காவல் கண்காணிப்பாளர் மேற்கொண்டுள்ளார்.
சிறுவனின் தந்தை சிறையில் இருக்கிறார். தாயார் இங்கே இல்லை என்பதை நாங்கள் அறிந்தோம். மிக விரைவில் நாங்கள் அவரது எதிர்காலத்தை உறுதிப்படுத்த ஒரு நிரந்தர இடத்தைக் கண்டுபிடிப்போம்".
இவ்வாறு குல்தீப் சிங் தெரிவித்தார்.
காவல்துறையினருக்கு நன்றி: சிறுவன்
இதுகுறித்து ஊடகவியலாளர்களிடம் பேசிய சிறுவன், "என் அம்மா இங்கே இல்லை, என் தந்தை சிறையில் இருக்கிறார். எனக்குத் துணையாக 20 நாட்களுக்கு முன்பு கிடைத்த ஒரு செல்ல நாய் உள்ளது. நான் அட்டைப் பெட்டிகளை விற்று அதிலிருந்து கொஞ்சம் பணம் சம்பாதித்தேன்.
நான் ஒரு தேநீர்க் கடையில் கப் கழுவும்போது நாய்க்கு பால் மற்றும் ரொட்டி கொடுக்க முடிந்தது. ஒரு நாள் என்னைக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அவர்கள் எனக்குப் புதிய ஆடைகளைக் கொடுத்து சரியான இடத்திற்கு அழைத்து வந்துள்ளனர். நான் அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.