Last Updated : 11 Oct, 2015 07:00 PM

 

Published : 11 Oct 2015 07:00 PM
Last Updated : 11 Oct 2015 07:00 PM

நரேந்திர மோடியின் தகுதிக்கு முன்பு குடும்ப அரசியல் எல்லாம் நிற்க முடியாது

“பிரதமர் நரேந்திர மோடியின் தகுதிக்கு முன்பு, குடும்ப அரசியல் எல்லாம் நிற்க முடியாது. தலைமை பண்புக்கு அவர் முன்னுதாரணமாக திகழ்கிறார்” என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி புகழாரம் சூட்டினார்.

ஆர்எஸ்எஸ் சார்பில் மராத்தி மொழியில் வெளிவரும் ‘தாருண் பாரத்’ என்ற நாளிதழ், பிரதமர் நரேந்திர மோடி பற்றிய சிறப்பு பதிப்பை தயாரித்துள்ளது. புத்தக வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு இதழில், மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, நிதின் கட்கரி, சுரேஷ் பிரபு, மனோகர் பாரிக்கர், ஸ்மிருதி இரானி, நரேந்திர சிங் தோமர், ஹர்ஷ்வர்தன், பிரகாஷ் ஜவடேகர் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர், மோடியை பற்றி கட்டுரை எழுதி உள்ளனர். ‘மகாநாயக்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இதழ் செவ்வாய்க்கிழமை வெளிவருகிறது.

இந்த இதழில் அமைச்சர் அருண் ஜேட்லி எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:

பிரதமர் மோடியின் தகுதிக்கு முன்பு, குடும்ப அரசியல் எல்லாம் எடுபடாது. அவர் தலைமை பண்புக்கு ரோல் மாடலாக இருக்கிறார். அவரை வெற்றிகொள்ள முடியாது. அவர் விரைந்து கற்கும் திறன் படைத்தவர். தினமும் புதிதாக எதையாவது கற்றுக் கொள்கிறார். அவருடைய மிகப்பெரிய பலமே சிறந்த தகவல் தொடர்பாளராகவும், சிறந்த பேச்சாளராகவும் இருப்பதுதான். இவை எல்லாம் சேர்ந்துதான் அவருக்கு புகழையும் செல்வாக்கையும் உருவாக்கி உள்ளது. அவருடைய பர்சனாலிட்டி அனைவரையும் வியக்க வைக்கிறது.

மோடியின் வெற்றிகளை பார்த்து குடும்ப அரசியலில் உள்ளவர்கள் அவரை குறி வைத்து அரசியல் நடத்துகின்றனர். ஆனால், அதில் வெற்றி பெற முடியாது. கடந்த சில ஆண்டுகளாக மோடிக்கு போராட்டங்களாக இருந்தன. ஆனால், அந்த கால கட்டத்தில் அவர் நிறைய கற்றுக் கொண்டார். தனித்து முடிவெடுப்பதில் வல்லவர். ஒரு முறை முடிவெடுத்து விட்டால், அதை செயல்படுத்தும் வரை வேகமாக செயல்படுபவர். எந்த ஒரு விஷயத்திலும் நம்பிக்கைக்கு முக்கியத்துவம் அளிப்பவர்.

அவருடைய தகவல் தொடர்பு சிறப்பு வாய்ந்தது.

வழக்கமாக அரசியல் தலைவர்கள் ஊடகங்கள் மூலம்தான் மக்களுடன் தொடர்பு வைத்து கொள்வார்கள். மோடி அப்படி இல்லை. மக்களுடன் நேரடியாக தொடர்பு வைத்து கொள்கிறார். அதனால்தான் ஊடகங்கள் செய்திகளை திரித்து வெளியிடும்போது, உடனடியாக மக்களிடம் நேரடியாக பேசி பதிலடி கொடுக்கிறார். ஊடகங்களின் விமர்சனங்களை கையாள்வதில் மோடிக்கு எந்த சிரமமும் இருந்ததில்லை.

குஜராத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக மோடிக்கு எதிராக ஊடகங்கள் தீவிர பிரச்சாரம் செய்தன. ஆனால், மோடி மக்களை நேரடியாக சந்தித்து வெற்றியும் பெற்றார். பிரதமர் மோடியின் வெற்றி உண்மையில் நம்மை மலைக்க வைக்கிறது. அதிசயிக்க வைக்கிறது. தெளிவான சிந்தனை உள்ளவர் மோடி. அதன்மூலம் நாட்டை சிறந்த முறையில் வழிநடத்திச் செல்கிறார். நிர்வாகத்தில் அவருடைய உத்தரவுகள், திட்டங்களை செயல்படுத்தும் முறை, முன்னின்று வழிநடத்திச் செல்லும் திறன், அமைச்சர்கள், அதிகாரிகளிடம் இருந்து பணிகளை தாமே பெற்று அவற்றை நிறைவேற்றி வைப்பது, சோர்வு அடையாமல் உள்ள அவரது உடல் பலம்.. இவை எல்லாம் சேர்ந்துதான் நமக்கு ரோல் மாடல் தலைவராக இருக்கிறார்.

இவ்வாறு அருண் ஜேட்லி புகழ்ந்து கூறியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x