Last Updated : 17 Dec, 2020 03:54 PM

 

Published : 17 Dec 2020 03:54 PM
Last Updated : 17 Dec 2020 03:54 PM

விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உண்டு; சிக்கலைத் தீர்க்க விரைவில் குழு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

டெல்லி சிங்கு எல்லையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் படம்| ஏஎன்ஐ

புதுடெல்லி,


பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காதவரை, விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை இருக்கிறது, வேளாண் சட்டங்களில் இருக்கும் சிக்கல்களை தீர்க்க சார்பற்ற,சுயாட்சிக் குழு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 20 நாட்களுக்கு மேலாக போராடி வரும் விவசாயிகளால் போக்குவரத்து முடக்கம், பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. அவர்களை அப்புறப்படுத்தி வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிடக்க கோரி பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

அதேபோல, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் பல்ேவறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏஎஸ் போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அமர்வில் நேற்று காணொலி மூலம் விசாரிக்கப்பட்டது. மத்திய அரசுத் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

வேளாண் சட்டங்களால் ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்க நாடு முழுவதும் விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், அரசு சார்பில் பிரதிநிதிகள் கொண்ட ஆலோசனைக் குழுவை அமைத்துப் பேசலாம். இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிடுகிறோம். நாளை (இன்று) இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்'' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதன்படி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏஎஸ் போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அமர்வில் இன்று காணொலி மூலம் விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறுகையில் “ வேளாண் சட்டங்கள் அரசியலமைப்புக்கு உட்பட்டதா எனும் மனு குறித்து இப்போது முடிவு செய்யமாட்டோம். இன்று முதலில் செய்ய வேண்டிய விஷயம், போாரட்டம் நடத்தும் விவசாயிகள் குறித்தும், அனைவரும் சுதந்திரமாக செல்வதற்கான உரிமை குறித்துதான். வேளாண் சட்டம் குறித்து விசாரிக்க சிறிது காத்திருங்கள்.

விவசாயிகள் போராட்டம் வன்முறையில் மாறாதவரை, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காதவரை அமைதியான முறையில் நடத்தும் போராட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டது. அமைதியான முறையில் போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு உரிமை உண்டு. விவசாயிகள் சரியான முறையில்தான் போராட்டம் நடத்துகிறார்கள் அதை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை.

ஆனால் பேச்சுவார்த்தை ஏதும் நடத்தாமல் தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தாலும் அதன் அர்த்தம் இல்லாமல் போகும். மத்திய அ ரசும், விவசாயிகளும் பேச்சு நடத்த வேண்டும். மக்களை பாதிக்காத வகையில் போராட்டத்தை சிறிது மாற்றியமைக்க முடியுமா என்பது குறித்து மத்திய அரசிடம் நாங்கள் கேட்போம்.

வேளாண் சட்டங்களில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க விவசாயிகள், அரசின் பிரதிநிகள் கொண்ட சார்பற்ற, சுயாட்சித்தன்மை கொண்ட குழுவை அமைத்து தீர்வு காணலாம் என நாங்கள் நினைக்கிறோம். நாங்கள் அமைக்கும் குழு, இதற்கான தீர்வுகளை வழங்கும் அதை பின்பற்றலாம். அதுவரை போராட்டம் நடக்கலாம் ஆனால் மக்களின் வாழ்க்கைக்கு எந்த ஆபத்தும் நேரக்கூடாது.

இந்தகுழுவில் பி.சாய்நாத், பாரதிய கிசான் யூனியன் உள்ளிட்ட பல்ேவறு விவசாய அமைப்புகளின் பிரதிநிகள் இருப்பார்கள் என ஆலோசனை தெரிவிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

அப்போது அட்டர்னி ஜெனரல் கே.சி. வேணுகோபால் வாதிடுகையில் “ போராட்டம் நடத்தும் விவசாயிகள் யாரும் முகக்கவசம் அணியவில்லை. மிகப்பெரிய அளவில் கூட்டமாக அமர்கிறார்கள். கரோனா குறித்த அச்சம் இருக்கிறது, போராடும் விவசாயிகள் கிராமங்களுக்கும் சென்றால் அங்கு பரவ வாய்ப்புள்ளது. மற்றவர்களின் அடிப்படை உரிமைகளை விவசாயிகள் மீற முடியாது”எனத் தெரிவித்தார்.

அப்போது தலைமை நீதிபதி பாப்டே கூறுகையில் “ டெல்லி செல்லும் வழியைத் விவசாயிகள் தடுத்தால் மக்கள் வேகமாகச் செல்லவே முயல்வார்கள். விவசாயிகளின் நோக்கம் என்பது போராட்டம் நடத்துவதோடு மட்டுமல்லாமல்,பேச்சு வார்த்தை நடத்தினால்தான் நிறைவேறும். போராட்டம் மட்டும் நடத்தினால் உதவாது.

நாங்களும் இந்தியர்கள்தான். விவசாயிகள் வேதனையை அறிகிறோம், அவர்களுக்காக வேதனைப்படுகிறோம். விவசாயிகளின் போராட்டம் செல்லும் பாதையை மட்டுமே மாற்ற வேண்டும். விவசாயிகள் அவர்களுக்காக நீதிகோரி வாதிடலாம் என உறுதியளிக்கிறோம், இதற்காக நாங்கள் குழுவையும் அமைக்க இருக்கிறோம்.

குளிர்கால விடுமுறையில் நீதிமன்றம் செல்ல இருப்பதால், இந்த வழக்கு குளிர்கால விடுமுறை நீதிமன்றத்திடம் செல்லும் என்பதை தெரிவிக்க அனைத்து விவசாயிகள் சங்கங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி தெரியப்படுத்த வேண்டும்.” என்று தெரிவித்தார்.

அப்போது அட்டர்னி ஜெனரலிடம் பேசிய தலைமை நீதிபதி பாப்டே, “ இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை, வேளாண் சட்டங்களை செயல்படுத்தாமல் நிறுத்திவைக்க முடியுமா. இந்த வழக்கு முடியும்வரை சட்டத்தை அமல்படுத்த எந்தநிர்வாக ரீதியான நடவடிக்கையும் எடுக்கமாட்டோம் என மத்தியஅரசு உறுதியளிக்க முடியுமா” எனக் கேட்டார்.

அதற்கு அட்டர்னி ஜெனரல் " மத்திய அரசிடம் விரிவாக ஆலோசனை நடத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் அமைக்கும் குழு வேளாண் சட்டத்தின் ஒவ்வொரு பிரிவுகளையும் தீவிரமாக ஆலோசி்த்து விவாதிக்கட்டும். அவர்களால் அந்த சட்டத்தை நீக்குங்கள் எனச் சொல்ல முடியாது எனத் தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதி பாப்டே, “ இதற்கான முடிவை அந்த குழுவிடம் விட்டுவிடுங்கள் அவர்கள் எடுக்கட்டும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x