Last Updated : 17 Dec, 2020 02:13 PM

 

Published : 17 Dec 2020 02:13 PM
Last Updated : 17 Dec 2020 02:13 PM

பிஎம் கேர்ஸ் நிதியின் வெளிப்படைத் தன்மை?- ராகுல் காந்தி விமர்சனம்

பிஎம் கேர்ஸ் நிதியில் வெளிப்படைத் தன்மை இல்லை, இந்தியத் தூதரகங்கள் மூலம் நன்கொடைகளை இந்திய அரசு பெறுகிறது என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்திருந்தது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் வெளிப்படைத் தன்மை இல்லாதது குறித்து விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா நேற்று ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மூலம் பிஎம் கேர்ஸ் நிதிக்கு நன்கொடை வாங்கப்படுகிறது. அதிலும் சீனா, பாகிஸ்தான், கத்தார் நாடுகளில் இருந்து பிஎம் கேர்ஸ் நிதிக்கு நன்கொடை வாங்குவது புதிராக இருக்கிறது.

பிரதமருக்கு 4 கேள்விகள்

பிஎம் கேர்ஸ் குறித்து இந்தியத் தூதரகங்கள் ஏன் விளம்பரம் செய்து, நிதி திரட்டும் பணியில் ஈடுபடுகின்றன?

சீனச் செயலிகள் தடை செய்யப்பட்ட நிலையில் அந்த செயலிகளில் ஏன் பிஎம் கேர்ஸ் குறித்து விளம்பரம் செய்யப்படுகிறது?

பாகிஸ்தானிலிருந்து எவ்வளவு பணம் நிதியாகப் பெறப்பட்டது, யார் நன்கொடை அளித்தது?

கத்தார் நாட்டில் எந்த இரு நிறுவனங்கள் நன்கொடை வழங்கின, எத்தனை கோடிகள் நன்கொடையாக பிஎம் கேர்ஸுக்கு பெற்றீர்கள்?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

ராகுல் காந்தி ட்விட்டரில் பகிர்ந்த புகைப்படம்

காங்கிரஸ் கட்சி சார்பில் பிஎம் கேர்ஸ் குறித்து எழுப்பப்பட்ட கேள்வியில், “ஆர்டிஐ சட்டம் மற்றும் சிஏஜி தணிக்கைக்குள் ஏன் பிஎம் கேர்ஸ் வரவில்லை. அதுமட்டுமல்லாமல் அந்நிய பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்திலிருந்து ஏன் பிஎம் கேர்ஸுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தது.

நாளேடு ஒன்று பிஎம் கேர்ஸ் நிதி தனியார் நிறுவனமா, அல்லது அரசு அறக்கட்டளையா எனத் தெரியாமல் இருக்கிறது எனச் செய்தி வெளியிட்டிருந்தது. அதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

அந்தச் செய்தியில், “பிஎம் கேர்ஸ் நிதி தனியார் நிதியா அல்லது அரசின் அறக்கட்டளையா எனத் தெளிவாகக் கூறப்படவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து நிதியை அரசு நிறுவனமாகப் பெறுகிறது. ஆனால் ஆவணங்களில் தனியார் நிதி எனத் தெரிவிக்கப்பட்டு, ஆர்டிஐ விலக்குபெற்றுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி தனது ட்விட்டரில், “பிஎம் கேர்ஸ் வெளிப்படைத் தன்மையை விட்டுவிடுங்கள்” என மட்டும் தெரிவித்து, அந்த நாளேட்டின் செய்தியை இணைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x