கரோனா ஊரடங்கு காலத்தில் இபிஎப் மூலம் 52 லட்சம் பேருக்கு ரூ.13,300 கோடி பட்டுவாடா: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தகவல்

சந்தோஷ் கங்வார்
சந்தோஷ் கங்வார்
Updated on
1 min read

‘‘கரோனா ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களின் நிதித் தேவையை பூர்த்தி செய்ய இபிஎப்ஓ அமைப்பு, 52 லட்சம் சந்தாதாரர்களுக்கு ரூ.13,300 கோடி தொகை அளித்துள்ளது’’ என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார். இவ்விதம் வழங்கப்பட்ட தொகையானது திரும்ப செலுத்த அவசியமில்லாத முன்வைப்புத் தொகையாகும்.

கரோனா ஊரடங்கு காலத்தில் நிதித் தேவையை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி உள்ளிட்டவற்றை கணக்கிட்டு அதில் 3 மாத தொகையை இபிஎப் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ள அனுமதித்தது.

தொழில்துறை கூட்டமைப்பான அசோசேம் அறக்கட்டளை வாராந்திர நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கங்வார் மேலும் கூறியதாவது:

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸை இந்தியா மிகவும் துணிவுடன், சாதுர்யமாக எதிர்கொண்டது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவும் வகையில் பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா (பிஎம்ஜிகேஒய்) திட்டம் மார்ச் 26-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

இபிஎப் சேமிப்பில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளும் உத்தரவை அவசரமாக மத்திய அரசு பிறப்பித்தது. இதன்படி 3 மாத அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப் படியுடன் சேர்ந்த தொகை அல்லது ஊழியர்களின் நிதியில் 75 சதவீதம் வரை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.

புதிய தொழில் கொள்கையில் தொழிலாளர் குறியீடு (கோட்) இடம்பெற்றுள்ளது. தொழில் உறவு, சமூக பாதுகாப்பு மற்றும் தொழில் சார்ந்த பாதுகாப்பு மற்றும் பணி புரியும் சூழல் ஆகியவற்றை இந்தக் குறியீடு உணர்த்துகிறது.

இதுதொடர்பான வரைவு மசோதா தொழில் துறையினரின் கருத்துக் கேட்புக்கு அனுப்பப்பட்டு இந்த 3 குறியீடு மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர் ஊதியம் தொடர்பான குறியீடு 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கான விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஏப்ரல் 2, 2021-க்குள் அனைத்து நான்கு தொழிலாளர் குறியீடுகளையும் நிறைவேற்ற அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் கங்வார் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in