

பாதுகாப்புக்கான நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நடந்தபோது, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட காங். உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினருக்குச் சீருடையை மாற்றுவது குறித்த ஆலோசனை நடந்ததால், இது நேரத்தை வீணடிக்கும் ஆலோசனை எனக் கூறி காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் பாதுகாப்புக்கான நாடாளுமன்றக் குழுவில் உறுப்பினராக இருக்கும் ராகுல் காந்தி பேசுவதற்கு, குழுவின் தலைவர் பாஜகவைச் சேர்ந்த எம்பி ஜுவல் ஓரம் அனுமதியளிக்கவில்லை. ராகுல் காந்தி கையை உயர்த்தித் தான் பேச விரும்புவதாகக் கூறியும் அனுமதியளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
சீன ராணுவத்தின் அத்துமீறல், லடாக் எல்லையில் பாதுகாப்பில் இருக்கும் ராணுவ வீரர்களுக்குச் சிறப்பான வசதிகள், கட்டமைப்புகளை ஏற்படுத்துவது குறித்துப் பேசப் போகிறேன் என ராகுல் காந்தி கேட்டபோதும், பேச அனுமதி வழங்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டத்தில் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் பிபின் ராவத் அமர்ந்திருந்தார். தரைப்படை, கப்பற்படை, விமானப்படையின் சீருடைகளை மாற்றி, புதிய சீருடை வழங்குவது குறித்து ஆலோசனை தொடங்கியது.
அப்போது ராகுல் காந்தி எழுந்து தேசப் பாதுகாப்பு, ராணுவத்தை எவ்வாறு பலப்படுத்துவது என்பது குறித்துப் பேசாமல் சீருடை குறித்துப் பேசுவது நேரத்தை வீணடிக்கும் செயல் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேச ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜீவ் சத்சவ், ரேவந்த் ரெட்டி இருவரும் ராகுல் காந்தியுடன் சேர்ந்து வெளிநடப்பு செய்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.