Last Updated : 16 Dec, 2020 06:39 PM

 

Published : 16 Dec 2020 06:39 PM
Last Updated : 16 Dec 2020 06:39 PM

கமல்நாத்தா? அசோக் கெலாட்டா?- அகமது படேல் பதவியில் புதியவரை அமர்த்த ஆலோசிக்கும் சோனியா

சமீபத்தில் மறைந்த அகமது படேல் வகித்த பதவியில் புதியவரை அமர்த்தக் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆலோசித்து வருகிறார். இந்த வாய்ப்பு மூத்த தலைவர்களான கமல்நாத் அல்லது அசோக் கெலாட் ஆகிய இருவரில் ஒருவருக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் பதவியில் இருந்த அகமது படேல், கரோனாவால் பாதிக்கப்பட்டு நவம்பர் 25ஆம் தேதி காலமானார். ராஜீவ் காந்தி பிரதமரானது முதல் அவருக்கு நெருக்கமானவர் அகமது படேல். அப்போது முதல் காங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பத்தினருக்கு இணையான முக்கியத்துவம், அகமது படேலுக்குக் கிடைத்தது. இவரது மறைவிற்குப் பின் அப்பதவிக்குப் பொருத்தமான மூத்த தலைவர் கட்சியில் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தின் முதல்வராக இருந்த கமல்நாத் அல்லது ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகிய இருவரில் ஒருவர் அரசியல் ஆலோசகர் பதவியில் அமர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இவர்களில் சோனியா காந்தி, கமல்நாத்தை அமர்த்த விரும்புவதாகத் தெரிகிறது.

ஏனெனில் கமல்நாத், மிகவும் அனுபவம் வாய்ந்தவர் என்பதுடன் காந்தி குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். இவர் ம.பி. தேர்தலில் வென்றும் தன் ஆட்சியைப் பாஜகவிடம் பறிகொடுத்துப் பரிதாப நிலையில் உள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரான கமல்நாத்திற்கு மற்ற கட்சிகளின் தலைவர்களுடனும் நல்ல நட்பு உள்ளது. எனவே, அகமது படேல் வகித்த பதவிக்குக் கமல்நாத் பொருத்தமானவராக இருப்பார் என சோனியா கருதுவதாகத் தெரியவந்துள்ளது.

இதனிடையே, அப்பதவிக்கு அசோக் கெலாட்டும் பொருத்தமானவர் என்ற வாதம் சோனியாவிடம் முன்வைக்கப்படுகிறது. இதன் பின்னணியில் ராகுல் காந்தி இருப்பதாகக் கருதப்படுகிறது.

ராஜஸ்தான் முதல்வராகப் பதவி ஏற்றது முதல் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே மோதல் நடைபெறுகிறது. இதனால், துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பைலட், காங்கிரஸை விட்டு வெளியேறவும் திட்டமிட்டார். இந்த முயற்சி கடைசி நேரத்தில் ராகுல் காந்தியின் தலையீட்டால் கைவிடப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் அசோக் கெலாட்டைத் தேசிய நிர்வாகத்துக்குக் கொண்டுவருவதன் மூலம் அவரது முதல்வர் பதவி காலியாகி விடும். அப்பதவியைத் தனக்கு நெருக்கமான சச்சின் பைலட்டுக்கு அளித்து இருவருக்கும் இடையிலான மோதலை முடிவிற்குக் கொண்டுவர ராகுல் கருதுகிறார். ஆனால், அசோக் கெலாட் இதற்குச் சாதகமாக இல்லை எனக் கருதப்படுகிறது.

இதற்கு கெலாட் தனது மகனான வைபவ் கெலாட்டை ராஜஸ்தானில் முக்கியத் தலைவராக முன்னிறுத்தும் முயற்சியில் இருப்பது காரணம். மக்களவைத் தேர்தலில் ஜோத்பூர் தொகுதியில் போட்டியிட்ட வைபவால் வெற்றி பெற முடியவில்லை. எனவே மீண்டும் மகனுக்கு முக்கிய வாய்ப்பளிக்க, முதல்வர் பதவியில் இருந்தால்தான் செய்ய முடியும் என அசோக் கெலாட் கருதுகிறார். இதன் காரணமாக அவர் தேசியத் தலைமைக்குச் செல்லத் தற்போதைக்கு விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் கமல்நாத் அல்லது அசோக் கெலாட்டை சோனியா காந்தியின் புதிய அரசியல் ஆலோசகராக அமர்த்தி விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது. இதன் பிறகே காங்கிரஸுக்கு நிரந்தரத் தலைவராக ராகுல் காந்தி அமர்த்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x