Published : 16 Dec 2020 10:48 AM
Last Updated : 16 Dec 2020 10:48 AM

இந்தியா- பாகிஸ்தான் போர் பொன்விழா கொண்டாட்டம் தொடக்கம்: போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

புதுடெல்லி

இந்தியா-பாகிஸ்தான் போரின் பொன்விழா ஆண்டு கொண்ட்டாட்டம் தொடங்குவதை முன்னிட்டு, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில், பொன்விழா வெற்றி ஜோதியை, பிரதமர் நரேந்திர மோடி இன்று ஏற்றி வைத்தார்.

1971ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த போரில், பாகிஸ்தான் ராணுவத்தை வீழ்த்தி, இந்திய ராணுவம் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றது. இது வங்கதேசம் உருவாக வழிவகுத்தது. இரண்டாம் உலகம் போருக்குப்பின், ராணுவ வீரர்கள் மிகப் பெரிய அளவில் சரணடைந்தது இந்தப் போரில்தான் நடந்தது.

இந்தியா - பாகிஸ்தான் போரின் 50வது பொன்விழா வெற்றி ஆண்டை இன்று முதல் கொண்டாடுகிறது. இதை முன்னிட்டு, நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

இதன் தொடக்க நிகழ்ச்சி, டெல்லியில் தேசிய போர் நினைவிடத்தில் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அவரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார்.

தேசிய போர் நினைவிடத்தில், போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு பிரதமர், முப்படை தலைமை தளபதி, முப்படை தளபதிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நினைவிடத்தில் உள்ள அணையா ஜோதியிலிருந்து, பொன்விழா வெற்றி ஜோதியை பிரதமர் ஏற்றி வைத்தார்.

மொத்தம் 4 வெற்றி ஜோதிகள் ஏற்றப்பட்டு, அவை 1971 போரில் பரம் வீர் சக்ரா, மகாவீர் சக்ரா விருதுகள் பெற்ற வீரர்களின் கிராமங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

விருதுபெற்றவர்களின் கிராமங்களில் இருந்து மண் எடுத்து வரப்பட்டு, தேசிய போர் நினைவுச் சின்னத்துக்கு கொண்டுவரப்படுகின்றன.

இந்த பொன்விழா வெற்றி ஆண்டை முன்னிட்டு, பல்வேறு நினைவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த போரில் பங்குபெற்றவர்கள் பாராட்டப்படவுள்ளனர். ராணுவ இன்னிசை நிகழ்ச்சி, கருத்தரங்குகள், கண்காட்சிகள், திரைப்பட விழாக்கள் உட்பட பல நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x