

இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளின் எல்லைப் பாதுகாப்பு படையினர், அருணாசலப் பிரதேச எல்லையில் நேற்றுமுன்தினம் சந்தித்துப் பேசினர்.
சீனாவின் 67-வது தேசிய தினத்தை முன்னிட்டு, அருணாசலப் பிரதேசத்தின் தவாங் மாவட்டம் பம்லா அருகே இந்த சம்பிரதாய சந்திப்பு நடைபெற்றது.
லடாக் பிராந்தியத்தில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (எல்ஏசி) இருநாட்டுப் படைகள் இடையே சில வாரங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்ட நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
இந்த சந்திப்புக்கு இந்தியத் தரப்பில், தவாங் பகுதி படைப் பிரிவின் கமாண்டரான பிரிகேடியர் டி.எஸ்.குஷ்வா தலைமை வகித்தார். சீனா தரப்பில் சோனா சோங் பகுதி படைப்பிரிவின் கமாண்டரான கர்னல் டாங் ஃபு செங் தலைமை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இரு நாடுகளின் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன. பிறகு இரு நாட்டுப் பிரநிதிகளின் தலைவர்கள் சம்பிரதாய உரை நிகழ்த்தினர். இதையடுத்து கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தோழமை உணர்வுடன் நடந்த இந்த சந்திப்பில் இரு நாட்டுப் படையினரும் எல்லையில் அமைதி, சுமுக உறவை மேம்படுத்த உறுதியேற்றுக்கொண்டனர்.
சீனாவின் தேசிய தினத்தை முன்னிட்டு கிழக்கு லடாக் பகுதியிலும் இரு நாடுகளின் படையினர் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.
இந்திய ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.