

கேரள நடிகை கடத்தப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் பெண் நீதிபதியை மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகையை காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில், நடிகர் திலீப் கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது திலீப் ஜாமீனில் உள்ளார்.
இந்த வழக்கானது, எர்ணாகுளத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, இந்த வழக்கை விசாரித்து வரும் பெண் நீதிபதி, நடிகர் திலீப்புக்கு சாதகமாக ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக கேரள அரசு குற்றம்சாட்டியது. மேலும், அவரை மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்திலும் அண்மையில் மனு தாக்கல் செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டபின்னர் நீதிபதிகள் கூறியதாவது:
கேரள அரசு தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுக்கு போதுமான காரணங்களும், ஆதாரங்களும் இல்லை. இதுபோன்ற குற்றச்சாட்டுகள், குறிப்பிட்ட நீதிபதியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
குறுக்கு விசாரணையின்போது வாக்குமூலங்களை நீதிபதி முறையாக பதிவு செய்யவில்லை என அரசு எண்ணினாலோ அல்லது வேறு ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தாலோ உயர் நீதிமன்றத்தை தாராளமாக அணுகலாம். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.