

கர்நாடக சட்டமேலவை துணைத்தலைவரை காங்கிரஸ் உறுப்பினர்கள் நாற்காலியில் இருந்து இழுத்து கீழே தள்ள முற்பட்டனர். இதனால் பாஜக, மஜத உறுப்பினர்கள் காங்கிரஸுடன் மோதலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக சட்டமேலவை கூட்டம் நேற்று காலை 11.15 மணிக்கு தொடங்கவிருந்தது. இதற்கான மணியோசை ஒலிப்பதற்கு முன்பே மேலவையின் துணைத்தலைவர் தர்மகவுடா (மஜத) தலைவர் இருக்கையில் அமர்ந்தார். உடனடியாக பாஜக உறுப்பினர்கள் மேலவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தும்படி முழக்கம் எழுப்பினர்.
இதனிடையே மேலவைத் தலைவர் பிரதாப் சந்திர ஷெட்டி (காங்கிரஸ்) அவைக்கு வந்து துணைத் தலைவர் தர்மகவுடாவை இருக்கையில் இருந்து எழுந்திருக்குமாறு தெரிவித்தார். அதனை ஏற்க மறுத்த அவர், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் நடவடிக்கையில் இறங்கினார். இதனால் கோபமடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைவர் இருக்கை அருகே சென்று தர்மகவுடாவுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.
அப்போதும் தர்மகவுடா இருக்கையில் இருந்து எழுந்திருக்க மறுத்ததால், காங்கிரஸ் உறுப்பினர்கள் நசீர் அகமது, நாராயணசாமி உள்ளிட்டோர் தர்மகவுடாவை கீழே இழுத்தனர். அவரது கையையும் சட்டையையும் பிடித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் இழுத்த நிலையில், இன்னொரு பக்கம் பாஜக, மஜத உறுப்பினர்கள் அவரை இழுத்து மீண்டும் இருக்கையில் அமர்த்த முற்பட்டனர். இந்த தள்ளுமுள்ளு காரணமாக துணைத்தலைவர் தர்மகவுடா நிலைதடுமாறினார்.10-க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் அவரை தாங்கிப்பிடித்து, காங்கிரஸ் உறுப்பினர்களிடம் இருந்து மீட்டனர். இந்த மோதலினால் தர்மகவுடாவின் முகத்திலும், கையிலும் சிறு காயங்கள் ஏற்பட்டன.
இதனிடையே காங்கிரஸாருக்கும், பாஜகவினருக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது. அதன் பிறகு பாதுகாவலர்கள் காங்கிரஸ் உறுப்பினர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.
இதுகுறித்து அவையில் இருந்தஅமைச்சர் ஈஸ்வரப்பா கூறும்போது, "காங்கிரஸார் அவையின்மாண்பை கெடுத்துவிட்டனர். காங்கிரஸ், மஜத கூட்டணி அரசுகவிழ்ந்த போதே மேலவைத் தலைவரும் துணைத் தலைவரும்தங்களது பதவியை தார்மீகரீதியில் ராஜினாமா செய்திருக்க வேண்டும். பாஜக ஆட்சி அமைந்த பிறகும், முந்தைய ஆட்சியில் தேர்வு செய்யப்பட்டவர்களே தொடர்வது சரி அல்ல. பசுவதை தடுப்பு சட்டம்உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை அவையில் நிறைவேற்றுவதை தடுக்கவே காங்கிரஸ் இத்தகைய மோசமான உத்தியை கையாள்கிறது" என்றார்.
இதையடுத்து பாஜக உறுப்பினர்கள் ஈஸ்வரப்பா தலைமையில் குழுவாக சென்று ஆளுநர் வாஜுபாய் வாலாவை சந்தித்து மனு அளித்தனர். அதில், “துணைத் தலைவரை தாக்கிய காங்கிரஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக தலைவர், துணைத் தலைவர் இருவரையும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என குறிப்பிட்டிருந்தனர்.