பஞ்சாப் போராட்டத்தில் வெளிநாட்டு சதியா? - மாநில அரசிடம் அறிக்கை கேட்கிறது மத்திய அரசு

பஞ்சாப் போராட்டத்தில் வெளிநாட்டு சதியா? - மாநில அரசிடம் அறிக்கை கேட்கிறது மத்திய அரசு
Updated on
1 min read

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறும் போராட்டத்துக்கான பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பதாகக் கூறுவது பற்றி அறிக்கை தருமாறு மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பஞ்சாப் போராட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்த பிறகு, பிரச்சினைக்குக் காரணமானவர்கள் உள்நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் வெளி நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந் தாலும் அவர்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் பரிட்கோட் மாவட்டம் பர்காரி கிராமத்தில் சீக்கியர்களின் புனித நூல் அவமதிக்கப்பட்டதாகக் கூறி அம்மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் பக்கத்து மாவட்டங்களுக்கும் பரவியது.

இந்நிலையில், புனித நூல் அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஜஸ்விந்தர் சிங் மற்றும் ரூபிந்தர் சிங் ஆகிய 2 சகோதரர்களை கைது செய்துள்ளதாக போலீஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆஸ்திரேலியா மற்றும் துபாய் நாடுகளிலிருந்து சிலர் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த செயலில் ஈடுபட்டதும், அவர்களிடமிருந்து நிதியுதவி பெற்றதும் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்த சகோதரர்கள் வெளிநாட்டில் உள்ளவர்களுடன் தொலைபேசியில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்கும் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி எம்.பி. பகவந்த் மான் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது பஞ்சாபில் நடைபெற்று வரும் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால், அங்கு அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

அப்போது, இதுதொடர்பாக மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுடன் ஏற்கெனவே தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு உதவும் என்று உறுதி அளித்திருப்பதாகவும் அவர்களிடம் கூறியுள்ளார்.

மேலும் சர்வதேச சீக்கிய கவுன்சில் தலைவர் முக்தியார் சிங்கும் ராஜ்நாத் சிங்கை சந்தித்து இதுதொடர்பாக பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in