Last Updated : 15 Dec, 2020 08:27 PM

 

Published : 15 Dec 2020 08:27 PM
Last Updated : 15 Dec 2020 08:27 PM

கரோனா லாக்டவுன்; வாகனத்துறையில் நாள்தோறும் ரூ.2,300 கோடி இழப்பு; 3.45 லட்சம் பேர் வேலையிழப்பு; 20% உற்பத்திக் குறைப்பு: நாடாளுமன்றக் குழு அறிக்கை

கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு கொண்டு வந்த லாக்டவுனால் மோட்டார் வாகனத் துறையில் நாள்தோறும் ரூ.2,300 கோடி இழப்பு ஏற்படுகிறது. தோராயமாக 3.45 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் வர்த்தகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இன்று தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கரோனா லாக்டவுனால் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வர்த்தகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் எம்.பி. கேசவ் ராவ் தலைமையில் அமைக்கப்பட்டது.

அந்தக் குழு வாகனத்துறையில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்து அதற்கான தீர்வுகள், பரிந்துரைகள் கொண்ட அறிக்கையை, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் இன்று வழங்கியது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட லாக்டவுனுக்குப் பின், தேவைக் குறைவு, வாகன விற்பனைக் குறைவு காரணமாக, ஆட்டோமொபைல் துறையில் அசல் உதரி பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியில் 18 முதல் 20 சதவீதத்தைக் குறைத்துவிட்டன.

இந்த உற்பத்திக் குறைவின் பாதிப்பு வேலையிழப்பை ஆட்டோமொபைல் துறையில் ஏற்படுத்தியது. இந்தத் துறையில் மட்டும் உத்தேசமாக 3.45 பேர் வேலையிழந்திருக்கக் கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோமொபைல் துறையில் வேலைக்குப் புதிதாக ஆட்களை எடுப்பதும் நிறுத்தப்பட்டுள்ளது. 286 ஆட்டோமொபைல் முகவர்கள் நிறுவனத்தை மூடிவிட்டனர். தொடர்ந்து ஆட்டோமொபைல் துறையில் உற்பத்திக் குறைப்பு ஏற்பட்டால், இந்தத் துறையில் ஈடுபட்டுள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தும் என ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கூட்டமைப்பு தெரிவித்தன.

கரோனா வைரஸ் மற்றும் லாக்டவுன் காரணமாக உதரி பாகங்கள் உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டனர். இதனால் நாள்தோறும் ஆட்டோமொபைல் துறையில் ரூ.2,300 கோடி இழப்பை ஏற்படுத்துகிறது .

இந்த பாதிப்பு ஆட்டோமொபைல் துறையில் அடுத்த 2 ஆண்டுகளுக்குத் தொடர்வதற்கான வாய்ப்புள்ளது. இதனால் திறனைக் குறைவாகப் பயன்படுத்துதல், முதலீட்டுக் குறைவு, நிறுவனங்கள் திவாலாக அதிகமான வாய்ப்பு, வேலையிழப்பு போன்றவை ஆட்டோமொபைல் துறையில் தொடர்வதற்கான வாய்ப்புள்ளது எனக் கணிக்கப்பட்டுள்ளது''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x