குடியுரசு தின விழா: சிறப்பு விருந்தினராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் இந்தியா வருகை
இந்தியா விடுத்த அழைப்பை ஏற்று, 2021 ஜனவரியில் நடைபெறும் குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் இந்தியா வருகிறார் என பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டோமினிக் ராப் இன்று அறிவித்தார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் நடந்த பேச்சுக்குப் பின் இந்தத் தகவலை அவர் தெரிவித்தார்.
பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் டோமினிக் ராப் 3 நாட்கள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை இன்று சந்தித்துப் பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலைச் சந்தித்து டோமினிக் ராப் பேசுகிறார். வரும் 17-ம் தேதி பெங்களூரு செல்லும் டோமினிக் ராப், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவைச் சந்தித்துப் பேசுகிறார்.
பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டோமினிக் ராப், மத்திய வெளியறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகிய இருவரும் டெல்லியில் 4 மணி நேரம் இரு தரப்பு உறவுகள் குறித்தும், பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
அதன்பின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “பிரிட்டன் அமைச்சரும் நானும் ஏறக்குறைய 4 மணி நேரம், இரு நாட்டு உறவுகளை இன்னும் முன்னேற்றமான திசையில், உயரே அழைத்துச் செல்வது குறித்துப் பேசினோம். ஆப்கானிஸ்தான் சூழல், வளைகுடா நாடுகளில் நிலவும் சூழல், இந்திய பசிபிக் மண்டல சூழல் குறித்தும் ஆலோசனை நடத்தினோம்.
சமீபகாலமாக உலக அரசியலில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தது உங்களுக்குத் தெரியும். இரு நாடுகளும் பரஸ்பர நலன்களைக் காக்க ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என நம்பினோம். தீவிரவாதம், அடிப்படைவாதம் குறித்த பல்வேறு கவலைகளையும் இதில் ஆலோசித்தோம்.
இந்தியாவின் அழைப்பை ஏற்று குடியரசு தின விழாவுக்கு பிரிட்டன் பிரதமர் சிறப்பு விருந்தினராக வருவது இந்தியா - பிரிட்டன் உறவில் புதிய சகாப்தம் தொடங்குவதற்கான அறிகுறி” என்று தெரிவித்தார்.
பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டோமினிக் ரோப் கூறுகையில், “ஜி7 மாநாட்டை அடுத்த ஆண்டு பிரிட்டன் நடத்துகிறது. இந்த மாநாட்டுக்கு இந்தியப் பிரதமர் மோடியை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அழைத்துள்ளார். பிரிட்டன் பிரதமரின் அழைப்பைப் பெருந்தன்மையுடன் இந்தியப் பிரதமர் ஏற்றுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, இந்தியாவின் குடியரசு தின விழாவுக்கு பிரிட்டன் பிரதமர் சிறப்பு விருந்தினராக வர வேண்டும் என இந்தியா விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்'' எனத் தெரிவித்தார்.
