

உத்தரப் பிரதேசத்தில் 2022இல் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிட உள்ளது. இதனால், அம்மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் வாக்குகள் மேலும் பிரியும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் கூறுகையில், ''கடந்த எட்டு வருடங்களில் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் மூன்று முறை ஆட்சி அமைத்துள்ளது. பஞ்சாப்பிலும் முக்கிய எதிர்க்கட்சியாக நாம் வளர்ந்துள்ளோம்.
எனவே, அடுத்து உ.பி.யின் 2022 சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக ஆம் ஆத்மி போட்டியிடும். உத்தரப் பிரதேச டெல்லி வாசிகளின் உறவுகள் பலரும் வாழ்கின்றனர். இவர்கள் என் முன்வைத்த கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்'' எனத் தெரிவித்தார்.
கடந்த 2013இல் முதன்முறையாகத் தேர்தலில் போட்டியிட்டு டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார் கேஜ்ரிவால். இதையடுத்து அக்கட்சி நாடு முழுவதிலும் 2014 மக்களவைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டது.
உத்தரப் பிரதேச வாரணாசியின் தேசிய ஜனநாயக முன்னணியின் பிரதமர் வேட்பாளர் நரேந்தர மோடியை கேஜ்ரிவால் எதிர்த்தார். இதில் இரண்டாவது இடத்தைப் பெற்றவர் பிறகு வாரணாசிக்குச் செல்லவில்லை. உத்தரப் பிரதேச அமேதி தொகுதியில் ஆம் ஆத்மியின் நிறுவனர்களின் ஒருவரான குமார் விஸ்வாஸ் போட்டியிட்டு ராகுல் காந்தியிடம் தோல்வியுற்றார்.
இவரும் அடுத்த 2019 மக்களவையில் மீண்டும் போட்டியிடவில்லை. 2014இல் பெரும்பாலான மாநிலங்களின் குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சிக்கு பஞ்சாப்பில் மட்டும் 3 எம்.பிக்கள் கிடைத்தனர். இதனால், அம்மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிட்டு எதிர்க்கட்சி அந்தஸ்தை ஆம் ஆத்மி பெற்றது.
எனினும், இனி டெல்லியைத் தவிர எங்கும் செல்வதில்லை என அறிவித்த கேஜ்ரிவாலின் கட்சி பஞ்சாப்பைத் தவிர வேறு எங்கும் போட்டியிடாமல் விலகி இருந்தது. சுமார் எட்டு வருடங்களுக்குப் பின் இப்போது உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் முதன்முறையாக பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த சமாஜ்வாதியும் அதைத் தொடராமல் பிரிந்தது. அதேபோல், கடந்த வருடம் மக்களவைத் தேர்தலிலும் பாஜகவிற்கே அதிகமான தொகுதிகள் கிடைத்தன. இதில் கூட்டணியாகப் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதியும் இனி சேரப்போவதில்லை என விலகிக் கொண்டன.
இங்கு சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவையின் எட்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அக்கட்சியே வெற்றி பெற்றது. இதற்கு அதை எதிர்த்த கட்சிகளால் பிரிந்த வாக்குகள் பாஜகவின் வெற்றிக்குச் சாதகமானதாகக் கருதப்பட்டது.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் போட்டியாலும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சி வாக்குகள் பிரியும் வாய்ப்புகள் உள்ளன. இதே நிலை, மீண்டும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ள அசாதுத்தீன் ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சியாலும் உருவாகும் நிலை இருப்பது நினைவுகூரத்தக்கது.