

மும்பையில் மருத்துவமனையில், இறந்த ஒருவருக்கு பிரேதப் பரிசோதனை செய்ய இருந்த நிலையில், அவர் திடீரென எழுந்து மருத்துவர்களை அதிர்ச் சிக்குள்ளாக்கி இருக்கிறார். இந்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகமும் காவல் துறையும் பரஸ்பரம் குற்றம்சாட்டி உள்ளன.
இதுகுறித்து மும்பை காவல் துணை ஆணையர் அசோக் துதே கூறியதாவது:
கடந்த ஞாயிற்றுக்கிழமை சாலையோரம் சுயநினைவின்றி மயங்கிக் கிடந்த ஒருவரைப் பார்த்த போலீஸார், அவரை அப்பகுதியில் உள்ள லோகமான்ய திலகர் நகராட்சி பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அந்த நபரை பரிசோதித்த ஒரு மருத்துவர், இறந்துவிட்டதாகக் கூறி சான்றிதழ் வழங்கியதுடன், பிரேதப் பரிசோதனைக்கு பரிந்துரை செய்துள்ளார்.
பிரேதப் பரிசோதனை தொடங்க இருந்த நிலையில், அந்த நபர் திடீரென எழுந்து உட்கார்ந்துள்ளார். இந்தத் தகவல் அறிந்த மற்ற மருத்துவர்களும் அந்த அறைக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கிருந்த போலீஸிடமிருந்த இறப்பு சான்றிதழைப் பிடுங்கி கிழித்துப் போட்டுள்ளனர். இவ்வாறு துதே தெரிவித்தார்.
இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் டாக்டர் சுலேமான் மெர்ச்சன்ட் கூறியதாவது: பிரதமரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க வேண்டியிருப்பதால், மயங்கிக் கிடந்த நபரை சாலையில் வைத்தே உடனடியாக பரிசோதிக்குமாறு போலீஸார் மருத்துவரை கட்டாயப்படுத்தினர்.
இதனால்தான் தவறு நடந்துவிட்டது. நோயாளியை மருத்துவமனைக்குள் எடுத்துச் சென்று பரிசோதிக்க போலீஸார் அனுமதித்திருந்தால், அவர்கள் சிறப்பாக செயல்பட்டிருப்பார்கள்.
எனினும், பிரமை பிடித்தது போல் இருக்கும் அந்த நோயாளியை சகஜ நிலைக்குக் கொண்டுவர முயற்சி செய்து வருகிறோம். ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள இந்த நோயாளி, மது அருந்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். இவ்வாறு சுலேமான் தெரிவித்தார்.
ஆனால், தங்களுடைய அலட்சியப் போக்கை மறைப் பதற்காக போலீஸார் மீது குற்றம் சாட்டுவதாக காவல் துணை ஆணையர் துதே தெரிவித் துள்ளார்.
இதுதொடர்பாக உள் விசாரணை நடத்தப்பட்டு ஆணையருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மும்பையில் ஆங்காங்கே கேட்பாரற்ற சடலங்கள் கிடைப்பது வழக்கமாக உள்ளது. இதுபோன்ற வர்களின் சடலங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவற்றைப் பாதுகாப்பதற்கு பிணவறைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது.