

கரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020-ம் ஆண்டில் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நடத்தப்படாது, 2021-ம் ஆண்டு ஜனவரியில் பட்ஜெட் கூட்டத் தொடரோடு இணைந்து நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தனித்தனியே கடிதம் எழுதி, குளிர்காலக் கூட்டத்தொடர் நடத்தமுடியாத சூழலுக்கு வருத்தம் தெரிவித்து, கரோனா சூழலை கூறி விளக்கியுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
டெல்லியில் குறிப்பாக கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. அதிலும் குளிர்காலத்தில் கரோனா வரைஸ் பரவலைக் கட்டுக்குள் வைப்பதும், நடவடிக்கைகள் எடுப்பதும் முக்கியமானவை. தற்போது டிசம்பர் மாதத்தில் நடுப்பகுதியில் இருக்கிறோம், கரோனா தடுப்பு மருந்தும் விரைவில் கிடைத்துவிடும் சூழலும் இருக்கிறது.
தற்போது டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் இருக்கும் சூழலில் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களிடம் பேசியபோது, அவர்கள் கரோனா வைரஸ் பரவலைக் காரணம்காட்டி, கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாத நிலையைக் கூறி கவலை தெரிவித்தார்கள்.
ஆதலால், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரை மிக விரைவாக நடத்த அரசு விருப்பமாக இருக்கிறது, அதாவது கரோனா வைரஸ் பரவல் சூழலை மனதில் கொண்டு பட்ஜெட் கூட்டத்தொடரோடு இணைந்து குளிர்காலக் கூட்டத்தொடரையும் நடத்த அரசு விருப்பம் கொள்கிறது.
அசாதாரண சூழலில், சிறப்பு ஏற்பாடுகளுடன் அடுத்து நடக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்று, ஆக்கப்பூர்வமாக கூட்டத் தொடர் நடக்க ஒத்துழைக்க வேண்டும்
இவ்வாறு கடிதத்தில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 2 வாரத்தில் தொடங்கி டிசம்பர் 2-வது வாரம் வரை நடைபெறும். ஆனால், இதுவரை நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நடத்துவதற்கான எந்த ஏற்பாடுகளையும் மக்களவை, மாநிலங்களவைச் செயலாளர்கள் செய்யவில்லை. அதற்கான பணிகளும் ஈடுபடவில்லை.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடத்தப்படுவதென்றால், 15 நாட்களுக்கு முன்னதாகவே எம்.பி.க்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கேள்வி நேரத்தில் கேட்கப்பட வேண்டிய கேள்விகளை அனுப்புமாறு கோர வேண்டும். ஆனால், இதுவரை எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை.
கரோனா தொற்றுக்கு மத்தியில் கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரை மத்திய அரசு நடத்தி எம்.பி.க்கள், நாடாளுமன்ற ஊழியர்கள், பாதுகாவலர்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர். இதனால், முன்னதாகவே கூட்டத்தொடர் நிறைவடைந்தது.
அதேபோன்ற சூழல் இந்த முறையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால், கூட்டத்தொடர் நடத்துவது குறித்து மத்திய அரசு மிகவும் கவனத்துடன்ஆலோசித்து வந்தது.
டெல்லியில் கரோனா வைரஸ் 2-வது கட்ட அலை தீவிரமாகப் பரவி மீண்டும் மக்கள் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த சூழலில் குளிர்காலக்கூட்டத்தொடர் நடத்துவது எம்.பி.க்கள், ஊழியர்கள் பாதுகாப்புக்கு பெரும் கேள்விக்குறியாக இருந்த நிலையில் அரசு தெளிவாக முடிவு எடுத்துள்ளது.