கடவுள் ராமர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர்; நாங்கள் ராமபக்தர்கள்: அகிலேஷ் யாதவ் பேச்சு

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் : கோப்புப் படம்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் : கோப்புப் படம்.
Updated on
2 min read

கடவுள் ராமர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர். விரைவில் எங்கள் குடும்ப உறுப்பினர்களோடு வந்து கடவுள் ராமரை அயோத்தியில் தரிசனம் செய்வேன் என்று உ.பி. முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசம் ஆசம்கார்க் நகரிலிருந்து லக்னோவுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று சென்றார். அப்போது அயோத்தி நகரில் தங்கி சிறிது ஓய்வு எடுத்தார்.

அப்போது அகிலேஷ் யாதவ் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தபோது கூறியதாவது:

“கடவுள் ராமர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர். நாங்கள் ராம பக்தர்கள், கிருஷ்ண பக்தர்கள். எங்கள் குடும்பத்தாருடன் விரைவில் அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்துவேன். எந்தத் தேதியில் வருவேன் என்று பின்னர் அறிவிப்பேன்.

சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தபோது, அயோத்தியின் வளர்ச்சிக்குப் பல்வேறு பணிகளைச் செய்திருக்கிறோம். அயோத்தியில் உள்ள ரிங்ரோடு பகுதியைச் சுற்றியுள்ள பிரிகர்மா சாலையில் பாரிஜாத மரங்களை நட்டு வளர்த்தோம்.

ராமாயணத்தில் அயோத்தியில் வளர்க்கப்பட்ட புராணரீதியில் தொடர்புடைய, ஆன்மிகத்துக்கு நெருக்கமான மரங்களைக் கோயிலைச் சுற்றி வளர்த்தோம். கோயிலுக்குச் செல்லும் சாலை முழுவதும் மரங்களை நட்டு வளர்த்தோம்.

சரயு நதிக்கரையில் மின்விளக்குகள் அமைத்து பக்தர்கள் எளிதாகச் சென்றுவர வகை செய்தோம், கடவுள் ராமரைப் போற்றி பஜனைகள் பாடவும், தேவையான இடங்களையும், இலவச ஒலிபெருக்கிகளையும் ஏற்பாடு செய்தோம்.

எங்கள் கட்சியின் எதிர்காலத் திட்டம் என்பது, தேர்தலுக்கு முந்தைய கூட்டணி ஏதும் இல்லை. தேர்தலுக்கு முந்தைய கூட்டணி வைத்து நல்ல பலன் கிடைக்கவில்லை, மோசமான அனுபவங்கள்தான் எனக்குக் கிடைத்தன.

அவ்வாறு தேர்தலுக்கு முந்தைய கூட்டணி வைத்தாலும் சிறிய கட்சிகளுடன்தான் கூட்டணி இருக்கும். மிகப்பெரிய கட்சிகளுடன் கூட்டணி இருக்காது.

அடுத்துவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 351 இடங்களில் வெல்லும் என நம்புகிறேன். என்னுடைய சித்தப்பா சிவபால் யாதவுக்கு தேர்தலில் போட்டியிட நிச்சயம் இடம் ஒதுக்கப்படும்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேச விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்தச் சட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு மரண சாசனம்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வழியைக் கண்டறிந்து, குறைந்தபட்ச ஆதார விலையை நீக்கமாட்டோம் என்று மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களால் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பலன் பெறும்”.

இவ்வாறு அகிலேஷ் யாத்வ தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in