Last Updated : 15 Dec, 2020 01:00 PM

 

Published : 15 Dec 2020 01:00 PM
Last Updated : 15 Dec 2020 01:00 PM

பூலன்தேவியின் பேமாய் வழக்கில் 39 வருடங்களாக தீர்ப்பிற்கு காத்திருந்த புகார்தாரர் மரணம்

புதுடெல்லி

சம்பல் கொள்ளைக்காரியாக இருந்த பூலன் தேவி மீது பேமாய் கிராமத்தில் 20 தாக்கூர் சமூகத்தினரை சுட்டுக் கொன்ற வழக்கு இன்னும் முடிவிற்கு வரவில்லை. கடந்த 39 வருடங்களாக அதன் தீர்ப்பிற்கு காத்திருந்த புகார்தாரர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

உத்தரப்பிரதேசம் கான்பூர் ஊரகப்பகுதியில் உள்ள பேமாய் கிராமம். இங்கு தாக்கூர் எனும் உயர் சமூகத்தினரால் பாதிக்கப்பட்ட பூலன்தேவி, ஆயுதங்கள் ஏந்தி கொள்ளைக்காரியானார்.

தனது கூட்டாளிகளுடன் பிப்ரவரி 14 1981 இல் பேமாய் வந்தவர் 20 தாக்கூர் சமூகத்தினரை சுட்டுக் கொன்றிருந்தார். இதையடுத்து சம்பல் பள்ளத்தாக்கின் கொள்ளைக்காரியானவர் மீது வழக்கு பதிவாகி 39 வருடங்களாக நடந்து வருகிறது.

கான்பூரின் ஊரகப் பகுதி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் கடந்த ஜனவரியில் முடிவிற்கு வர இருந்தது. அப்போது கடைசிநேரத் திருப்பமாக பேமாய் வழக்கை விசாரித்த காவல்துறையினரால் சமர்ப்பிக்கப்பட்ட ‘கேஸ் டயரி’ காணாமல் போயிருந்தது.

கேஸ் டயரியை தேடிப் பிடிக்கும்படி நீதிமன்ற அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதனால், தீர்ப்பு வெளியாகாமல் பேமாய் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், அவ்வழக்கின் புகார்தாரர்களில் ஒருவரான ராஜாராம்சிங்(80) நேற்று முன்தினம் மரணமடைந்தார். இவர் தான் பேமாய் சம்பவம் நடைபெற்றவுடன் அருகிலுள்ள காவல்நிலையத்தில் பூலன் உள்ளிட்ட 36 கொள்ளையர்கள் மீது புகார் அளித்தவர்.

இது குறித்து ராஜாரமின் மகனான ராம்பதம் சிங் கூறும்போது, கல்லீரல் பாதிக்கப்பட்டு பல நாட்களாக எனது தந்தை சிகிச்சை பெற்று வந்தார். தனது புகார் மீதான தீர்ப்பை கேட்டு விட்டு மனநிறைவுடன் மரணத்தை ஏற்கத் தயார் எனக் கூறி வந்தார்.

அவரது கடைசி ஆசை 39 வருடங்களுக்கு முன் நடைபெற்ற சம்பவத்தில் நிறைவேறாமல் போய் விட்டது. இவ்வழக்கின் சாட்சிகள் 43 இல் இதுவரை 28 பேரும் இறந்து விட்டனர்.’ என வருந்தினார்.

இன்று நடைபெற்ற ராஜாராமின் இறுதிச் சடங்கிற்கு பேமாயை சுற்றியுள்ள கிராமவாசிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து இறுதி அஞ்சலில் செலுத்தினர். பேமாய் வழக்கின் 36 குற்றவாளிகளில் நான்கு பேர் மட்டுமே தற்போது உயிருடன் உள்ளனர்.

இவர்களில் போஸா(75) சம்பவத்தின் போது கைதாகி இன்னும் சிறையில் உள்ளார். பிக்கா(65), விஷ்வநாத்(54) மற்றும் ஷியாம் பாபு(75) ஆகியோர் ஜாமீனில் உள்ளனர். இறந்துபோன மற்றவர்களில் பூலன்தேவி, டெல்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பேமாய் சம்பவம்

சாதாரணக் கிராமப் பெண்ணாக இருந்த பூலன், பேமாயின் 22 உயர் சமூகத்தினரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தார். பிறகு நிர்வாணமாக கிராமத்தில் நடக்க விட்டதையும் பழிவாங்கும் பொருட்டு இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இதன் குற்றவாளிகளில் 32 பேர் வழக்கின் விசாரணை நிலையில் இறந்து விட்டனர். இவர்களில் முக்கியக் குற்றவாளியான பூலன் தேவி மட்டும் டெல்லியிலுள்ள எம்.பி அரசு குடியிருப்பில் பட்டப்பகலில் ஜூலை 25, 2001 இல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவ்வழக்கில் கைதான ஷேர்சிங் ராணா, பேமாய் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தண்டனை மீதான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ளது.

தனது கொள்ளை வாழ்வில் இருந்து விடுபட கடந்த 1983 இல் மத்தியபிரதேச காவல்துறையிடம் பூலன் சரணடைந்தார். பிறகு மபியின் ஜபல்பூர் மற்றும் குவாலியர் சிறைகளில் 11 வருடம் கழித்த பின் 1994 இல் விடுதலையானார்.

பிறகு சமாஜ்வாதி கட்சியில் இணைந்து உ.பி.யின் மீர்சாபூர் தொகுதியில் 1996 மற்றும் 1999 இல் எம்.பியாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் மீது தொடர்ந்து வந்த 54 வழக்குகள், சமாஜ்வாதி ஆட்சியில் உ.பி. முதல்வராக இருந்த முலாயம்சிங்கால் வாபஸ் பெறப்பட்டது.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த வி.பி.சிங்

பேமாய் சம்பவத்தின் போது உ.பி. முதல்வராக இருந்த வி.பி.சிங், தார்மீகப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். பிறகு நாட்டின் கூட்டணிக் கட்சிகளால் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x