

கேரள மாநில மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் கடந்த வாரத்தில் வெளியிட்ட அறிவிப்பு குறித்து மாநிலத் தேர்தல் ஆணையம் விளக்கம் கோரியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூரில் கடந்த சனிக்கிழமை முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “கரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்தபின், கேரள மக்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும்.
மக்களிடம் இருந்து எந்தக் கட்டணமும் அரசு வாங்காது. இலவசமாகத் தடுப்பூசி போடப்படும். இதுதான் எங்களின் நிலைப்பாடு. ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கும் என்பது தெரியவில்லை” எனக் குறிப்பிட்டார்.
மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலின் 3-வது கட்டத் தேர்தல் திங்கள்கிழமை (நேற்று) நடக்க இருந்த சூழலில் கரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் எனும் முதல்வர் பினராயி விஜயனின் அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இருக்கிறது என காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் குற்றம் சாட்டின.
அதுமட்டுமல்லாமல் முதல்வர் பினராயி விஜயனின் அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது எனக் கூறி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ், பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத் தரப்பு, “மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலின் 3-வது கட்டத் தேர்தல் முடியாத சூழலில், முதல்வர் பினராயி விஜயன் கரோனா தடுப்பூசி குறித்த அறிவிப்பு, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதா, எந்தச் சூழலில் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டீர்கள் என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பூசி குறித்த அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன என்று முதல்வர் பினராயி விஜயனிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், “தேர்தல் நடத்தை விதிமுறைகள் எதையும் நான் மீறவில்லை. மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசம் எனும் எங்கள் நிலைப்பாட்டைத் தெரிவித்தேன். கரோனாவுக்கு இலவசமாக அரசு மருத்துவ சிகிச்சை அளிக்கிறது. அதேபோல கரோனா தடுப்பூசியும் இலவசமாக வழங்கும். இதில் என்ன விதிமுறை மீறல் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.