

டெல்லி முன்னாள் சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி மீது தொடரப்பட்ட கொலை முயற்சி மற்றும் குடும்ப வன்முறை வழக்குகளில் சமரச பேச்சுக்கு தான் தயாராக இல்லை என அவரது மனைவியும் மனுதாரருமான லிபிகா மித்ரா உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதி மீது, அவரது மனைவி லிபிகா மித்ரா கொலைமுயற்சி, குடும்ப வன்முறை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கில் இணக்கமான பேச்சுவார்த்தைக்கு லிபிகா மித்ரா தயாரா என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல் தத்து, நீதிபதி அமிதவ ராய் ஆகியோரடங்கிய அமர்வு கருத்து கேட்டது.
அதற்கு லிபிகா மித்ரா மறுத்து விட்டார். அவர் வழக்கைத் தொடர்ந்து நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ‘சோம்நாத் பாரதி ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய லாம். அவ்வாறு தாக்கல் செய்யப் பட்டால் அதே தினத்திலோ, மறுநாளோ அந்த மனுவை விசாரிக்கும்படி விசாரணை நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடும்’ என சோம்நாத் பாரதி தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
கடந்த முதல் தேதி, சோம்நாத் பாரதியின் இடைக்கால ஜாமீன் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் மறுத்திருந்தது. சமரச பேச்சு தொடர்பாக கருத்தை அறிவதற்காக லிபிகா மித்ரா நேரில் ஆஜராகும்படி கோரியிருந்தது.