

இந்திய தொழில் வர்த்தக சபை சம்மேளனங்கள் கூட்டமைப்பின் (ஃபிக்கி) ஆண்டுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று கூறியதாவது:
மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் இந்தியாவை ஒரு முக்கிய கேந்திரமாக மாற்றுவதற்காக உற்பத்தி அடிப்படையிலான சலுகைகள் (பிஎல்ஐ) வழங்கப்படுகிறது. மொபைல் உற்பத்தியில் இந்தியாவை 2-வது நாடாக மாற்ற தீர்மானிக்கப்பட்டது. இந்த இலக்கு 2017-ல் எட்டப்பட்டுவிட்டது. தற்போது சீனாவை பின்னுக்குத் தள்ளி உலகில் அதிக எண்ணிக்கையிலான மொபைல் போன் தயாரிக்கும் நாடாக இந்தியாவை உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மின்னணு பொருள் உற்பத்தி தொடர்பான தேசிய கொள்கையின் அடிப்படையில் அடுத்த 5 ஆண்டுகளில் இத்துறை உற்பத்தி இலக்கு ரூ.26 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உற்பத்தி அடிப்படையில் ஊக்கச் சலுகை அளிக்கும் திட்டமே உலகில் பிரபலமாகத் திகழும் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு காரணம்.
மத்திய அரசு மொத்தம் 16 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில் வெளிநாட்டு நிறுவனங்களும் அடங்கும். இவை மேற்கொள்ள உள்ள முதலீட்டுத் தொகை ரூ.11 ஆயிரம் கோடி. உற்பத்தி அடிப்படையில் மொபைல் போன் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தி செய்யும் அளவு ரூ.10.5 லட்சம் கோடி அளவுக்கு இருக்கும்.
ஆப்பிள், பாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகட்ரான் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் ஆலைகளை அமைக்க முன்வந்துள்ளன. இவை தவிர ஏற்கெனவே சாம்சங் மற்றும் ரைசிங் ஸ்டார் ஆகியன இங்கு உற்பத்தி ஆலை அமைத்து செயல்பட்டு வருகின்றன.
உள்நாட்டு மொபைல் போன் உற்பத்தி நிறுவனங்களான லாவா, பகவதி (மைக்ரோமேக்ஸ்) பாட்ஜெட் எலெக்ட்ரானிக்ஸ் (டிக்ஸான் டெக்னாலஜீஸ்), யுடிஎல் நியோலிங்க்ஸ், ஆப்டிமஸ் ஆகிய நிறுவனங்களின் விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டுள்ளன.
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.