

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் பண்டாரு தத்தாத்ரேயா. பாஜகவின் மூத்த நிர்வாகியான இவர், மத்திய இணை அமைச்சராக பணியாற்றி உள்ளார். தற்போது இவர் இமாச்சல மாநில ஆளுநராக உள்ளார். இந்நிலையில், ஹைதராபாத் வந்துள்ள ஆளுநர், நேற்று காலையில் ஹைதராபாத்திலிருந்து சூர்யாபேட்டைக்கு காரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது, ஹைதராபாத்-விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில், நல்கொண்டா மாவட்டம், கைத்தாபுரம் எனும் இடத்தில் அவரது கார் ஒரு மரத்தின் மீது லேசாக மோதி நின்றது. இந்த விபத்தில் ஆளுநர் தத்தாத்ரேயாவுக்கும், அவரது உதவியாளருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் இவர்கள் வேறு ஒரு காரில் ஹைதராபாத் புறப்பட்டு சென்றனர். அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.