Published : 14 Dec 2020 09:20 PM
Last Updated : 14 Dec 2020 09:20 PM

தகவல் தொழில்நுட்பத் துறை போல் இந்தியர்களுக்கு விண்வெளித் துறையிலும் புகழ் கிடைக்கும்: பிரதமர் மோடி நம்பிக்கை

முக்கிய தொழில் துறையினர், ஸ்டார்ட் அப் முயற்சியாளர்கள், விண்வெளித் துறை கல்வியாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் கலந்துரையாடினார். விண்வெளி செயல்பாடுகளில் அவர்களை ஊக்குவிப்பதற்காக இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

பிரதமர் தலைமையில் ஜூன் 2020-ல் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விண்வெளித் துறையில் தனியாரை அனுமதிக்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அத்தாட்சி மையம் (IN-SCACe) உருவாக்கப்பட்டிருப்பதன் மூலம், தனியார் நிறுவனங்களுக்கும், ஸ்டார்ட் அப்களுக்கும் சம அளவிலான வாய்ப்புகள் கிடைக்கும். அதன் தொடர்ச்சியாக, விண்வெளித் துறையின் கீழ் செயல்படும் இந்த மையத்திடம் நிறைய திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. செயற்கைக்கோள் தொகுப்புகள் உருவாக்குதல், சிறிய செயற்கைக்கோள் ஏவும் வாகனங்கள், தரைக் கட்டுப்பாட்டு நிலையம், புவிபரப்பு சேவைகள், உந்துசக்தி நடைமுறைகள், பயன்பாட்டு பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்டவை இவற்றில் அடங்கும்.

இதுவரை தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்காக, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். விண்வெளித் துறையில் உள்ள வாய்ப்புகளை அவர் விவரித்தார். விண்வெளித் துறையில் இந்தியாவுக்கு உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்த பிறரையும் அனுமதிக்கும் முடிவால், இத் துறையில் அரசு - தனியார் பங்களிப்பில் புதிய யுகம் தொடங்கியுள்ளது என்று பிரதமர் கூறினார். இந்த விருப்ப லட்சியத்தில் அனைத்து வகையிலும் அரசு உதவிகள் அளிக்கும் என்று அவர் உறுதியளித்தார். தொழில் முறையிலான அணுகுமுறை, வெளிப்படையான கொள்கைகள், அரசு முடிவெடுத்தலில் வெளிப்படையான செயல்பாடுகள் மூலமாக, இத் துறையில் ஈடுபடும் நிறுவனங்கள் பயன்பெறும் என்று பிரதமர் கூறினார்.

ராக்கெட்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் தயாரிப்பதற்கு நிறுவனங்கள் முன்வைத்துள்ள திட்டங்கள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, விண்வெளித் துறையில் மாற்றத்தை பலப்படுத்துவதாக இது இருக்கும் என்றார். இத்துறையில் தனியார் துறை பங்கேற்பதால், உயர் தொழில்நுட்ப வேலைகளில் வாய்ப்பு பெருகும், ஐ.ஐ.டி, என்.ஐ.டி.களிலும், இதர தொழில்நுட்பக் கல்வி நிலையங்களிலும் பயில்வோர் இதன் மூலம் அதிக வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள் என்று அவர் தெரிவித்தார். தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகம் முழுக்க இந்தியர்கள் புகழ் சேர்த்திருப்பதைப் போல, விண்வெளித் துறையிலும் சாதிப்பார்கள் என்று தாம் உறுதியாக நம்புவதாக அவர் கூறினார்.

தொழில் செய்தல் எளிமையானதாக இருக்கும் என்ற நிலை பற்றி குறிப்பிட்ட பிரதமர், விண்வெளித் துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் தொழில் செய்தலை எளிமையாக்குவதற்காக மட்டுமின்றி, ஒவ்வொரு நிலையிலும் இதில் பங்கேற்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார். பரிசோதனை வசதிகள், ஏவுதளங்கள் போன்ற வசதிகளும் அளிக்கப்படும் என்றார் அவர். இந்தச் சீர்திருத்தங்கள் மூலம், விண்வெளித் துறையில் இந்தியாவின் போட்டியிடும் வாய்ப்பு மேம்படும் என்றும், மிகவும் வறுமையிலிருப்பவர்களையும் விண்வெளித் துறை முன்னேற்றங்களின் பயன்கள் சென்று சேர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர்கள், துணிவாக சிந்தனை செய்து சமூகத்திற்கும், நாட்டுக்கும் பயன்தரும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் கடல்வழி அறிதலில், விண்வெளித் துறையின் முக்கியத்துவத்தை பிரதமர் கோடிட்டுக் காட்டினார். இந்த விண்வெளி ஆராய்ச்சி காலத்தில் இஸ்ரோவுடன் இணைந்து பயணிப்பவர்களாக தனியாரும் இருப்பார்கள் என்று கூறிய அவர், விண்வெளிக்கான தேவைகளை உற்பத்தி செய்யும் மையமாக இந்தியா விரைவில் உருவாகும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

விண்வெளித் துறை செயலரும், இஸ்ரோ-வின் தலைவருமான டாக்டர் கே. சிவன், தனியார் நிறுவனங்கள் IN-SPACe-ல் சமர்ப்பித்துள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து பிரதமரிடம் விளக்கினார். விண்வெளித் துறை அளிக்கும் உதவிகள் பற்றியும் அவர் விவரித்தார். விண்வெளி செயல்பாடுகளில் ஈடுபட 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அறிவியல் துறையை நாடி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

சீர்திருத்தங்கள் பற்றிய கருத்துகளை இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமரிடம் பங்கேற்பாளர்கள் பகிர்ந்து கொண்டனர். பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுனில் மிட்டல், லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தைச் சேர்ந்த ஜெயந்த் பாட்டீல், அக்னிகுல் காஸ்மாஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் ரவிச்சந்திரன், ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த பவன்குமார் சந்தனா, ஆல்பா வடிவமைப்பு தொழில்நுட்பங்கள் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த கர்னல் எச்.எஸ். சங்கர், மேப்மை இந்தியா நிறுவனத்தின். ராகேஷ் வர்மா, பிக்சல் இந்தியா நிறுவனத்தின் அவைஸ் அஹமது, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி கேசன் ஆகியோர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

விண்வெளித் துறையில் தனியார் பங்கேற்புக்கு அனுமதி அளித்ததற்கு பிரதமருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். விண்வெளித் துறையில் சூப்பர் பவர் அந்தஸ்தை இந்தியா பெறுவதற்கு இது உதவியாக இருக்கும் என்று அவர்கள் கூறினர். தற்சார்பு இந்தியா திட்டத்தில் தீவிரமாக பங்கேற்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர்கள் கூறினர். தங்களுடைய திட்டங்களுக்கு இஸ்ரோ அளிக்கும் உதவிகளையும், வழிகாட்டுதல்களையும் அவர்கள் பாராட்டினர்.

இஸ்ரோவுடன் இணைந்து தனியார் மேற்கொள்ளும் கூட்டு முயற்சிகள், ஆண்டுதோறும் ஏவும் ராக்கெட்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், ராக்கெட் என்ஜின்களில் தொழில்நுட்ப மேம்பாட்டில் புதிய வளர்ச்சி ஏற்பட உதவியாக இருக்கும் என்றும் கூறினர். குழந்தைகளை ஈர்க்கும் வகையில், இஸ்ரோ வளாகங்களில் அதிக அளவுக்குக் குழந்தைகளை அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் யோசனை தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x