

500 நாட்கள் தாமதமாக ஒரு வழக்கில் பதில் மனு, மேல்முறையீட்டு மனுவை உத்தரப் பிரதேச அரசு தாக்கல் செய்ததைக் கண்டித்த உச்ச நீதிமன்றம், நீதிமன்ற நேரத்தை வீணடித்தமைக்காக ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
மேலும் உத்தரப் பிரதேச அரசின் பதில் மனுவையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர். இந்த உத்தரவு கடந்த 1-ம் தேதி பிறப்பிக்கப்பட்டாலும், இதற்கான அதிகாரபூர்வ உத்தரவு நகல் கடந்த வாரத்தில்தான் வெளியானது.
உ.பி. அரசு ஊழியராக இருக்கும் பிரேம் சந்திரா என்பவர் கடந்த 1985-ல் பணிக்குச் சேர்ந்தார். ஆனால், அவர் பணிக்குச் சேர்ந்ததில் பல்வேறு குழப்பங்கள் இருப்பதாகக் கூறி உ.பி. அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் எந்தவிதமான முறைகேடுகளும் நடக்கவில்லை. தொடர்ந்து அந்தப் பணியில் அவர் தொடரலாம் எனக் கூறி தொழிலாளர் நீதிமன்றம் 2009-ம் ஆண்டு தீர்ப்பளித்து.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உ.பி. அரசு சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டிலும் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றம் 2018-ம் ஆண்டில் உறுதி செய்தது.
ஆனால், இந்தத் தீர்ப்பை எதிரத்து மேல்முறையீடு செய்ய அளிக்கப்பட்ட அவகாசம் முடிந்தபின்பும் உச்ச நீதிமன்றத்தில் உ.பி. அரசு பதில் மனுத்தாக்கல் செய்யவில்லை. மேல்முறையீடும் செய்யவில்லை. இந்நிலையில் 500 நாட்கள் தாமத்த்துக்குப் பின், உத்தரப் பிரதேச அரசு மேல்முறையீட்டு மனுவை இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அமர்வில் கடந்த 1-ம் தேதி விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கே. கவுல், உத்தரப் பிரதேச அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார். அதில், “எத்தனை நாட்களுக்குப் பின் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யப்போகிறோம், கோப்புகளை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் போகிறோம் எனும் அடிப்படை மரியாதைகூட இல்லையா?
சிறப்பு அனுமதி மனுவை 576 நாட்கள் தாமதத்துக்குப் பின் தாக்கல் செய்துள்ளீர்கள். மேல்முறையீட்டுத் தேதிகள் முடிந்தபின், கோப்புகள் எவ்வாறு நகர்த்தப்படும். இதுபோன்று தாமதமாகப் பதில் மனுத்தாக்கல் செய்பவர்கள், மேல்முறையீடு செய்பவர்களைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். அதற்கான அபராதத்தையும் அவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.
தாமதமாகத் தாக்கல் செய்யப்பட்ட சிறப்பு அனுமதி மனுவைத் தள்ளுபடி செய்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த உத்தரப் பிரதேச அரசுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம். இந்த அபராதத்தை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் நல நிதிக்குச் செலுத்த வேண்டும். தாமதமாகப் பதில் மனுவையும், மேல்முறையீட்டு மனுவையும் தாக்கல் செய்தமைக்கு இந்த அபராதம் விதிக்கப்படுகிறது” என உத்தரவிட்டார்.