

குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை பின்பற்றும்படி மக்களை கட்டா யப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்கள் தொகை அதிகரித்து வருவதால் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை தீவிரமாக அமல் படுத்த உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீது மத்திய அரசுபதிலளித்தது. அதில் கூறியிருப்பதாவது:
மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காகவே, ‘தேசிய மக்கள் தொகை கொள்கை- 2000’ அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதில், 2025-ம் ஆண்டுக்குள் தேசிய கருத்தரிப்பு விகிதத்தை 2.1 சதவீதமாக குறைப்பதற்கான திட்டம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், மக்கள் தொகைபெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை பின்பற்றும்படி மக்களை கட்டாயப்படுத்த முடியாது. இத்தனை குழந்தைகளைதான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்த முடியாது.
குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை பின்பற்றும்படி கட்டாயப்படுத்துவது, மக்கள் தொகை நெறிமுறைகளை சீர்குலைக்கும். குடும்பக் கட்டுப்பாட்டை தம்பதி கள் விரும்பி ஏற்பது மூலமாகவும், மாநில அரசுகளின் செயல் திட்டங்கள் மூலமாகவும் மட்டுமே இது சாத்தியமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.