

வேட்பாளர்களின் தேர்தல் செலவு உச்சவரம்பை மாற்றியமைப்பது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்தை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.
நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு உச்சவரம்பு கடைசியாக கடந்த 2014-ல் மாற்றியமைக்கப்பட்டது. இதையடுத்து 2018-ல் ஆந்திரா, தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களுக்கு மட்டும் செலவு உச்சவரம்பு உயர்த்தப்பட்டது.
கடந்த 6 ஆண்டுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை 83.4 கோடியில் இருந்து 2019-ல் 91 கோடியாகவும் தற்போது 92.1 கோடியாகவும் உயர்ந்துள்ளது. என்றாலும் தேர்தல் செலவு உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை.
கடந்த அக்டோபரில் பிஹார் சட்டப்பேரவை தேர்தலின்போது கரோனா பொதுமுடக்கத்தால் வேட்பாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு தேர்தல் செலவு வரம்பை 10 சதவீதம் உயர்த்திக்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடந்த 7-ம் தேதி எழுதியுள்ள கடிதத்தில், தேர்தல் செலவு உச்ச வரம்பை மாற்றியமைப்பது குறித்து கருத்து கோரியுள்ளது.
செலவு உச்ச வரம்பை மாற்றியமைப்பது தொடர்பாக கடந்த அக்டோபரில் அமைக்கப்பட்ட குழுவின் பொறுப்பு அதிகாரிக்கு கருத்தை அனுப்புமாறு கட்சிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
இக்குழு தனது பரிந்துரையை வழங்குவதற்கு முன்பு, வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்வு, செலவு பணவீக்க குறியீடு மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துகளை கவனத்தில் கொள்ளும். மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு உச்சவரம்பு மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.