

ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களில் இணைவதில் இருந்து இந்திய இளைஞர்களை காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜு கூறியுள்ளார்.
இஸ்லாமிய அரசை அமைக்கப்போவதாக இராக்கி லும், சிரியாவிலும் பல்வேறு கொடூரங்களை நிகழ்த்தி வரும் ஐஎஸ் தீவிரவாதிகள் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இளைஞர்களை தங்கள் பக்கம் இழுத்து வருகிறார்கள்.
இண்டர்நெட் உதவியுடன் இவை நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் இருந்து ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து போரிட சென்ற மகாராஷ்டிர இளைஞர்களில் ஒருவர் அங்கு கழிவறை சுத்தப்படுத்தும் வேலைக்கு அமர்த்தப்பட்டார். இந்திய இளைஞர்கள் போதிய உடல் வலிமை இல்லாதவர்கள் என்று கூறி ஐஎஸ் தீவிரவாதிகள் இவர்களுக்கு கழிவறை சுத்தப்படுத்தும் வேலையை அளித்தனர். துப்பாக்கி ஏந்தும் கனவுடன் சென்ற அந்த இளைஞர் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி மீண்டும் இந்தியாவுக்கு வந்தார். அவர் போலீஸில் அளித்த தகவல்களில் மேலும் பல இந்திய இளைஞர்கள் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இதனை முறியடிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஸ்வீடன் நாட்டு உள்துறை அமைச்சர் அன் லிண்ட், டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜுவை சந்தித்துப் பேசினார். அப்போது ஐஎஸ் தீவிரவாதிகளால் உலக அமைதிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள், அதனை முறியடிப்பது குறித்து இருவரும் விவாதித்தனர்.
ஐஎஸ் தீவிரவாதிகளால் இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப்படுவது ஐரோப்பிய நாடுகளில் பிரச்சினையாக உள்ளது. அத்தீவிரவாதிகளின் பிடியில் இருந்து இளைஞர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இது விஷயத்தில் இந்தியா ஏற்கெனவே தீவிர நடவடிக்கை களை மேற்கொண்டுள்ளது. தீவிரவாத இயக்கத்துடன் இண்டர்நெட் மூலம் தொடர்பில் இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கிரண் ரிஜ்ஜு தெரிவித்தார்.