

நாடாளுமன்றத் தாக்குதலில் கமலேஷ் குமாரியின் வீரமிக்க உயிர்த் தியாகம் குறித்து சிஆர்பிஎஃப் வெளியட்டுள்ள புதிய புத்தகத்தில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2001, டிசம்பர் 13-ம் தேதி இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் பாதுகாப்பை மீறி நுழைந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 8 பாதுகாப்பு வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பயங்கரவாதிகளும், பாதுகாப்புப் படையினரால் சம்பவத்தின்போதே கொல்லப்பட்டனர்.
நாடாளுமன்றத்தின் மீதான தாக்குலில் உயிரிழந்தோருக்கான நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தினர்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) 2001-ல் நாடாளுமன்றத் தாக்குதலின்போது, பயங்கரவாதிகளின் தாக்குதலை எதிர்கொண்டு உயிர்த் தியாகம் செய்த கமலேஷ் குமாரி உள்ளிட்ட துணிச்சலான வீரர்களின் வீரம் குறித்து ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளது.
துணிச்சல் மிக்க சிஆர்பிஎஃப் வீரர்களின் வாழ்க்கைக் கதைகளைச் சொல்லும் இந்த நூலை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று வெளியிட்டார். இந்நிகழ்வின்போது நாடாளுமன்ற அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
புத்தகத்தை வெளியிட்டு ஓம் பிர்லா பேசுகையில், "இந்தப் புத்தகம் அனைவரின் இதயங்களையும் பெருமையுடன் பூரிக்கவைக்கிறது. இதில் உள்ள பல்வேறு வீரதீரங்கள் குறித்த பதிவுகளும் வரும் தலைமுறையினரை ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.
புத்தகத்தின் இணை ஆசிரியரான சிஆர்பிஎஃப் டிஐஜி நிதூ கூறுகையில், ''இது அதிரடி நடவடிக்கைகளை மட்டும் குறிப்பிடும் புத்தமல்ல. துணிச்சல் மிக்க சிஆர்பிஎஃப் வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் உணர்வுபூர்வமாகப் பேசுகிறது'' என்றார்.
சிஆர்பிஎஃப் வீரர்கள் துணிச்சல்மிக்க வாழ்க்கைக் கதைகள்
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சிஆர்பிஎஃப் டிஜி ஏ.பி.மகேஸ்வரி கூறுகையில், ''துணிச்சல் மிக்க சிஆர்பிஎஃப் வீரர்களின் வாழ்க்கைக் கதைகளை விவரிக்கத் தொடர்ச்சியான புத்தகங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்தத் தொடரின் முதல் புத்தகம் படை வீரர்களின் வீரத்தை நினைவுபடுத்தும் மிகவும் முன்மாதிரியான 13 செயல்களின் தொகுப்பாகும்.
சிஆர்பிஎஃப்பின் புகழ்பெற்ற வரலாற்றை அதன் துணிச்சல்மிக்க வீரர்களால் இந்நூல் உருவாக்கப்பட்டது. கடும் தைரியம் மற்றும் கடமைக்கான உணர்வுமிக்க அர்ப்பணிப்புடன் அவர்கள் தேசத்திற்குப் பணியாற்றியவர்கள். இந்த அச்சமற்ற ஆண்கள் மற்றும் பெண்களின் வீரச்செயல்கள் 2,000 க்கும் மேற்பட்ட துணிச்சலான பதக்கங்களுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளன" என்றார்.