

நாடாளுமன்றத்தின் மீதான கோழைத்தனமான தாக்குதலை ஒருபோதும் மறக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
2001, டிசம்பர் 13-ம் தேதி இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் பாதுகாப்பை மீறி நுழைந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 8 பாதுகாப்பு வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பயங்கரவாதிகளும், பாதுகாப்புப் படையினரால் சம்பவத்தின்போதே கொல்லப்பட்டனர்.
நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவம் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான உறவைச் சிக்கலாக்கியது. இரு நாடுகளுக்கிடையே பெரும் பதற்றத்தை அதிக அளவில் தூண்டியது. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பில் பெரிய அளவிலான முன்னேற்றத்திற்கும் வழிவகுத்தது. நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தோடு தொடர்புடைய அப்சல் குரு 2013 பிப்ரவரி 9-ல் தூக்கிலிடப்பட்டார்.
நாடாளுமன்றத்தின் மீதான தாக்குலில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இன்று அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து இன்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
"2001-ல் இதே நாளில் நடந்த நமது நாடாளுமன்றத்தின் மீதான கோழைத்தனமான தாக்குதலை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். நமது நாடாளுமன்றத்தைப் பாதுகாப்பதற்காக உயிர்த்தியாகம் புரிந்தவர்களின் வீரம் மற்றும் தியாகத்தை தேசம் இன்று நினைவுகூர்கிறது. இந்தியா அவர்களுக்கு எப்போதும் நன்றி செலுத்தும்" .
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.